புதுடெல்லி (07 ஜன 2020): “டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (JNU) மாணவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஏபிவிபி அமைப்பினரே உள்ளனர்!” என்று ஜே.என்.யூ மாணவர் சங்க தலைவர் அய்ஷி கோஷ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (05-01-2020) மாலை ஜே.என்.யூ பல்கலைக்கழத்தின் மாணவ, மாணவிகள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த நூற்றுக்கு மேற்பட்ட முகமூடி அணிந்த கும்பல், அங்கிருந்த கல்லூரி மாணவர்கள், மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவ பிரிவான ABVB துணையுடன் இந்த பயங்கரம் நடத்தப்பட்டு உள்ளது. விடுதிக்குள் இருந்த மாணவிகள் கெஞ்சியும் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் ABVB ஐச் சார்ந்த பெண் பயங்கரவாதிகளும் இருந்தனர்.
இச் சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல் குறித்த அதிரவைக்கும் தகவல்களும் விவரங்களும் தற்போது வெளியான வண்ணம் உள்ளன.
இந்நிலையில், ஜேஎன்யு மாணவர் சங்கத்தலைவர் அய்ஷி கோஷ் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஜேஎன்யூ விடுதியில் இருந்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது வன்முறையாளர்கள் நடத்திய தாக்குதல் முழுமையாகத் திட்டமிட்டே நடத்தப்பட்டுள்ளது.
சபர்மதி விடுதியில் முகமூடி அணிந்துவந்த வன்முறையாளர்கள் பெயரைச் சொல்லியே உருட்டுக்கட்டை, கிரிக்கெட் மட்டை, இரும்புக் கம்பிகள், சுத்தியல் ஆகிய கொடூர ஆயுதங்களைப் பயன்படுத்தி அடித்தனர். திடீரென நிகழ்ந்த கண்மூடித்தனமான தாக்குதலை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. வன்முறையாளர்களை அங்குள்ள காவலாளிகளும் தடுக்கவில்லை. காவலாளிகளுக்கும், தாக்கியவர்களுக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இவை ஆர்.எஸ்.எஸ் மற்றும் ABVB குண்டர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலாகும். தாக்கியோர் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 4-5 நாட்களாகவே விடுதி வளாகத்தில் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது. சில ஆர்எஸ்எஸ் ஆதரவு பேராசிரியர்கள் மற்றும் ஏபிவிபி அமைப்பினரின் திட்டமிட்ட சதியால், மாணவர்கள் மீது இந்த கொடூரத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஏபிவிபி குண்டர்களின் இந்த பயங்கரவாதத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த தீவிரவாதிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலை துணைவேந்தர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று அய்ஷி கோஷ் கூறினார்.
நடந்து முடிந்த பயங்கரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களும் ஆசிரியர்களும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.