கோழிக்கோடு (08 மார்ச் 2020): கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பரவுவதாக சுகாதாரத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் மேற்கு கொடியத்தூர் மற்றும் வேங்கிரி பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.
இதில், 2 பேருக்கு பறவை காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பறவை காய்ச்சல் பரவுவது குறித்து கால்நடைத் துறை மந்திரி ராஜு உத்தரவின்பேரில், அதிகாரிகளின் உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், சுகாதாரத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
பறவை காய்ச்சல் பரவும் பகுதிகளில் எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் நோய் அறிகுறி உள்ளவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டது.
கேரளாவில் நோய் தாக்கம் உள்ள பகுதிகளில் இருக்கும் கால்நடை பண்ணைகள், கோழிப்பண்ணைகளில் ஆய்வு நடத்த கால்நடை துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பண்ணைகளில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் சுற்றளவில் குடி இருக்கும் பொதுமக்களுக்கு ரத்த பரிசோதனை மற்றும் சுகாதார சோதனைகள் நடத்தவும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.