இந்தூர் (17 டிச 2020):: மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தை கவிழ்ப்பதில் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய பங்கு வகித்துள்ளார் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா தெரிவித்துள்ளார்.
இந்தூரில் புதன்கிழமை நடைபெற்ற பொது விழாவில் உரையாற்றியபோது விஜயவர்கியா இந்த தகவலை வெளியிட்டார். இதில் வேடிக்கை என்னவென்றால் இது யாருக்கும் தெரியாத ரகசியம் என்று உண்மையை போட்டு உடைத்தார். பாஜகவின் ரகசியத்தை பாஜக தலைவரே பொதுவில் சொன்னதுதான் வேடிக்கை
கமல்நாத் அரசாங்கத்தை வீழ்த்துவதில் யாராவது முக்கிய பங்கு வகித்திருந்தால், அது நரேந்திர மோடி தான், தர்மேந்திர பிரதான் அல்ல, விஜயவர்கியா மேலும் கூறினார். இந்த விழாவில் மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் இதே பிரச்சினையை எழுப்பியிருந்தார். காங்கிரஸ் மீது ஜோதிராதித்யா சிந்தியாவின் அதிருப்தியை பாஜக பயன்படுத்திக் கொண்டு கமல்நாத் அரசு கவிழ்க்கப் பட்டதாக சவுகான் தெரிவித்திருந்தார்..
ஜோதிராதித்ய சிந்தியாவுடன், கமல்நாத் தலைமையிலான அரசின் 22 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.