அகர்தலா (29 டிச 2022): : திரிபுராவில் பாஜக எம்எல்ஏ திபச்சந்திரா ஹ்ரான்கவுல் கட்சியில் இருந்து விலகினார். எம்.எல்.ஏக்களின் தொடர் விலகலால் அங்கு பாஜக ஆட்டம் கண்டுள்ளது.
இவர் ஓராண்டில் கட்சியிலிருந்து வெளியேறும் எட்டாவது எம்.எல்.ஏ. திபச்சந்திரா காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மூன்று முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த 67 வயதான இவர், 2018 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பாஜகவில் இணைந்தார். அவர் தலாய் மாவட்டத்தில் உள்ள கரம்சேராவில் சிட்டிங் எம்.எல்.ஏவாக இருந்தார். பாஜக சார்பில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
திபச்சந்திரா தனிப்பட்ட காரணங்களால் தான் ராஜினாமா செய்ததாக அவர் ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளார். காங்கிரஸுக்கு திரும்புவீர்களா என்ற கேள்விக்கு, வரும் நாட்களில் தெரியும் என்று பதிலளித்தார்.
திபச்சந்திரா விலகல் குறித்து பதிலளித்த பாஜக செய்தித் தொடர்பாளர் சுப்ரதா சக்ரவர்த்தி, வயது மூப்பு காரணமாக திபச்சந்திரன் ராஜினாமா செய்திருக்கலாம். பதவி விலகுவதால் கட்சியின் எதிர்காலம் பாதிக்கப்படாது. மேலும், கட்சியின் பணி என்பது எந்த ஒரு நபரையும் சார்ந்தது அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
ஒரு மாதத்திற்கு முன்பு, பாஜக கூட்டணிக் கட்சியான பீப்பிள்ஸ் ஃப்ரண்ட் ஆஃப் திரிபுராவின் (ஐபிஎஃப்டி) மேவர் குமார், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கட்சியில் இருந்து விலகினார்.
60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பாஜகவுக்கு தற்போது 33 உறுப்பினர்கள் உள்ளனர். ஐபிஎஃப்டிக்கு ஐந்து. எதிர்க்கட்சியான சிபிஎம் கட்சிக்கு 15 இடங்களும், டிப்ராவுக்கு 2 இடங்களும், காங்கிரசுக்கு ஒரு இடமும் உள்ளன.