போபால் (01 நவ 2020): பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க சென்ற பாஜகவை சேர்ந்த ஜோதிராதித்யா சிந்தியா வாய் தவறி காங்கிரசுக்கு வாக்கு சேகரித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 3 ம் தேதி மத்திய பிரதேசத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கு பிரச்சாரம் மேற்கொண்ட சமீபத்தில் காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜோதிராதித்யா சிந்தியா, பாஜகவுக்கு பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்நிலையில் தப்ராவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தின் போது ஜோதிராதித்யா சிந்தியா பாஜக வேட்பாளர் இம்ராதி தேவிக்கு வாக்கு சேகரித்தார். அப்போது “நவம்பர் 3 ஆம் தேதி கை சின்னத்திற்கு வாக்களித்து காங்கிரசை வெற்றி பெற செய்யுங்கள் ” என்று சொன்னார். இதனை கேட்ட அங்குள்ள பாஜகவினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்புதான் தான் செய்த தவறை சிந்தியா உணர்ந்தார். அவர் உடனடியாக தன்னைத் திருத்திக்கொண்டு . தாமரை சின்னத்தில் வாக்களிக்கக் கேட்டுக் கொண்டார்.
சிந்தியா காங்கிரஸை விட்டு வெளியேறி இந்த ஆண்டு மார்ச் மாதம் பாஜகவில் சேர்ந்தார். சிந்தியாவுடன் 22 எம்.எல்.ஏக்களும் காங்கிரஸை விட்டு வெளியேறினர். இதன் மூலம் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு மத்திய பிரதேசத்தில் ஆட்சியை இழந்தது குறிப்பிடத்தக்கது.