ஒரு பிரபலத்தின் அலட்சியம் – ஒட்டு மொத்த பிரபலங்களும் அதிர்ச்சியில்!

Share this News:

புதுடெல்லி (21 மார்ச் 2020): பிரபல இந்தி பின்னணி பாடகி கனிகா கபூரின் அலட்சியத்தால் சினிமா நட்சத்திரங்கள் மட்டுமல்ல பெரும் அரசியல்வாதிகளும் அதிர்ச்சியில் உள்ளனர்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. சீனாவை அடுத்து இத்தாலி, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸால் உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டியுள்ளது.

பிரபல பின்னணி பாடகி கனிகா கபூர் அவரது அலட்சியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த இவர் பிப்ரவரியில் ஒரு நிகழ்ச்சிக்காக லண்டன் சென்றவர், இந்த மாதம் 9-ம் தேதி மும்பை விமான நிலையத்துக்கு வந்திறங்கினார். இதன்பின் நேற்று தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவு ஒன்றை இட்டார். அதில், தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், லண்டனில் இருந்து திரும்பியபோது விமான நிலையத்தில் தன்னை பரிசோதனை செய்தபோது அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றும், நான்கு நாள்களுக்கு முன்புதான் அறிகுறிகள் தென்பட்டதாகவும், தற்போது குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் சினிமா பிரபலமாக அறியப்படும் இவர் தற்போது லக்னோவில் சிகிச்சை பெற்றுவருகிறார். சிகிச்சைக்கு மத்தியில் கனிகாமீது உத்தரப்பிரதேச காவல்துறை 3 பிரிவுகளின் மீது வழக்கு தொடுத்திருக்கிறது. இதற்கு கூறப்படும் காரணம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடு சென்று நாடு திரும்புபவர்கள் 14 நாள்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஆனால் கனிகாவோ அப்படிச் செய்யவில்லை. மாறாக, லக்னோவின் நட்சத்திர ஹோட்டல்களில் நடந்த இரண்டு மூன்று பார்ட்டிகளில் கலந்துகொண்டுள்ளார். 15-ம் தேதி நடந்த பார்ட்டியில் கனிகாவுடன், உத்தரப்பிரதேச மாநில அமைச்சர் ஒருவர், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே, அவரின் மகன் துஷ்யந்த் எம்.பி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய எம்.பி ஒருவர் உட்பட பல அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் என சுமார் 100 பேர் வரை பங்கேற்றுள்ளனர்.

தற்போது கனிகாவுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து வசுந்தரா ராஜே உட்பட பல நபர்களும் தங்களை தனிமைப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே, கனிகாவின் அலட்சியத்தால் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்துக்கும் தொற்று பரவியிருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கனிகா கலந்துகொண்ட பார்ட்டியில் பங்கேற்ற வசுந்தரா ராஜேவின் மகன் எம்.பி துஷ்யந்த், பார்ட்டிக்குப் பின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்பாடு செய்த விழாவில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. இப்போது துஷ்யந்த் தன்னைத் தானே தனிமைப்படுத்தியுள்ளார். இதனால் ஜனாதிபதிக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. விரைவில் ராம்நாத் கோவிந்த் மருத்துவ பரிசோதனை செய்ய உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, துஷ்யந்த் ஜனாதிபதியின் நிகழ்ச்சி மட்டுமல்ல, கடந்த 2 நாள்களாக நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும் பங்கேற்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனால் பல்வேறு எம்.பி-க்களும் தற்போது கொரோனா அச்சத்தில் உள்ளனர். இவ்வளவு அலட்சியமாகச் செயல்பட்ட பாடகி கனிகா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், கனிகா வசித்துவந்த அப்பார்ட்மென்ட் முற்றிலுமாக தனிமைப்படுத்தப்பட்டு அங்கிருக்கின்ற அனைவருக்கும் தற்போது மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. நாட்டு மக்கள் பொது இடங்களில் கூட வேண்டாம் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தனியார், அரசு ஊழியர்களுக்கு விடுமுறை, கல்வி நிலையங்கள் மூடல் எனப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், நாளை ஒருநாள் பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இப்படியான நிலையில் அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் அரசின் உத்தரவை மதிக்காமல் பார்ட்டிகளில் கலந்துகொண்டது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசின் உத்தரவு சாமானிய மக்களுக்கு மட்டும்தானா என்று கேள்விகளையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *