திருவனந்தபுரம் (05 ஜூன் 2020): கேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரத்தில் பாஜக மதச்சாயம் பூசுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
கேரளாவில் அன்னாசி பழத்தில் பட்டாசுகளை நிரப்பி அதை யானையை உண்ணவைத்து கொன்ற விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படுகொலை குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும் வனப்பகுதிகளில் அட்டகாசம் செய்யும் காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட காட்டுவிலங்குகளை வெடிகள் வைத்து கொல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இது சட்டவிரோதம் என்றாலும், அதனை எங்களால் கட்டுப்படுத்த இயலவில்லை. அப்படி வைக்கப்பட்ட பழத்தை தான் இந்த யானை தவறுதலாக தின்றிருக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே வன அதிகாரிகளின் கூற்றுப்படி, காட்டு யானை பாலக்காடு மாவட்டத்தில் உள்ள சைலண்ட் பள்ளத்தாக்கின் காடுகளை விட்டு வெளியேறி, அருகிலுள்ள கிராமத்தில் உணவு தேடி அலைந்து திரிந்து மன்னர்க்காட்டை அடைந்தது, அங்கு பட்டாசு நிரப்பப்பட்ட அன்னாசிப்பழம் கிடைத்தது. யானை அன்னாசிப்பழத்தை சாப்பிட்டபோது, அது வெடித்து காயம் ஏற்பட்டு சாப்பிட முடியாமல் வலியால் துடித்து இறுதியில் ஒரு ஆற்றில் நின்று இறந்தது.
இச்சம்பவம் முகநூலில் வெளியானதும், பாஜகவினரும், சில ஊடகங்களும் கேரளாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மலப்புறம் மாவட்டத்தில் நடந்தது போன்று பிரச்சாரம் மேற்கொண்டனர்.
ஆனால் இந்த இதயத்தை சிதைக்கும் சம்பவம் உண்மையில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மன்னார்காட்டில் நடந்தது, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மலப்புரம் மன்னார்காட்டில் இருந்து 54 கி.மீ தூரத்தில் உள்ளது. ஆனால் வேண்டுமென்றே பாஜக உள்ளிட்ட கட்சிகள் இச்சம்பவத்திற்கு மதச்சாயம் பூசுகின்றன. இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே யானை கொல்லப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கேரள வனதுறை அமைச்சர் கே.ராஜு தெரிவித்துள்ளார்.