புதுடெல்லி (08 ஜூன் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 9,983 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவில் மொத்த நாவல் கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை 2,56,611 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 7,135 ஐ எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், திங்கள்கிழமை காலை முடிவடைந்த நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸால் 9,983 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா இருப்பது இன்று கண்டறியப்பட்டதாக தமிழக சுகாதார துறை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 31 ஆயிரத்தை தாண்டியது.
மேலும் ஒரே நாளில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா, பிரேசிலைத் தொடர்ந்து இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. உலக நாடுகளில் கொரோனாவால் மொத்தம் 70,85,702 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 4,05,272 ஆகவும் அதிகரித்திருக்கிறது.