புதுடெல்லி (26 பிப் 2020): டெல்லி கலவரத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடியுரிமை சட்ட திருத்தத்தினை குறித்து நடந்த வன்முறையில் காயமடைந்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு உடனடியாக அளிக்கவேண்டிய சிகிச்சையை உறுதி செய்யுமாறு நள்ளிரவில் நடந்த விசாரணையில், டெல்லி உயர் நீதிமன்றம் போலீசாருக்கு அறிவுறுத்தியது.
நீதிபதி எஸ். முர்லிதரின் இல்லத்தில், காயமடைந்தவர்களுக்கு போதுமான வசதிகள் உள்ள மருத்துவ நிறுவனங்களுக்கு அவர்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்ற அவசர வேண்டுகோளின் பேரில் இந்த விசாரணை நடந்தது. இந்த நிகழ்விற்காக தங்களுக்கு உள்ள அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்துமாறு நீதிபதிகள் எஸ்.முரளிதர் மற்றும் அனுப் ஜே பம்பானி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டது. மேலும் காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்த தகவலை இணைத்து அறிக்கை அளிக்குமாறும் அந்த பெஞ்ச் கோரியது. மேலும் இந்த விவகாரம் இன்று புதன்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு விசாரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை டெல்லியில் உள்ள குரு தேக் பகதூர் மற்றும் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனைகளின் மருத்துவ கண்காணிப்பாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அந்த பெஞ்ச் தெரிவித்துள்ளது.