புதுடெல்லி (30 நவ 2020): வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் ஒட்டு மொத்த இந்திய விவசாயிகளுக்கான போராட்டம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி அரியானா எல்லையில் மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தொடங்கி நான்கு நாட்கள் ஆகின்றன. கிளர்ச்சி தீவிரமடைந்து வருகிறது, மத்திய அரசு போராட்டத்தை நிபந்தனைகளுடன் முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்கிறது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றனர். “இந்த விவசாய சட்டங்களை யாருக்காக மத்திய அரசு இயற்றியுள்ளது.?, நாட்டில் உள்ள பெறும் முதலாளிகளின் நலனுக்காகவே அன்றி இது விவசாயிகளின் நலனுக்கானது அல்ல.
‘நாட்டில் உள்ள விவசாயிகள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆயினும் இந்த போராட்டத்தை பஞ்சாபில் விவசாயிகளுக்க்கானது மட்டுமே என்று முத்திரை குத்த மத்திய அரசு முயற்சிக்கிறது. இதை அவர்கள் அகில இந்திய போராட்டமாக ஏற்கவில்லை. அதனால்தான் அவர்கள் எங்களுடன் மட்டுமே உரையாட விரும்புகின்றனர். இது உண்மை இல்லை. இந்த போராட்டம் அனைத்து விவசாயிகளுக்குமானது. இதில் கலந்து கொள்ள நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளையும் அழைக்க வேண்டும். அவர்களின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் ‘என்று விவசாயிகள் பதிலளித்தனர்.
முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். ஆனால், நிபந்தனைகளுடன் விவாதிக்க அழைக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை விவசாயிகள் எடுத்தனர். நிபந்தனைகளுடன் தாங்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்றும் நிபந்தனைகள் வாபஸ் பெற்றால் அவர்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கு மத்திய அரசு தயாராக இல்லை.
சனிக்கிழமை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விவசாயிகளின் வேலைநிறுத்தத்தை சிங்கிலிருந்து புராடிக்கு மாற்ற வேண்டும் என்றார். அங்கு விவாதத்திற்கு தயாராக இருப்பதாகவும் அமித் ஷா கூறியிருந்தார். ஆனால் விவசாயிகள் போராட்டம் நடத்தும் இடத்தை மாற்ற முடியாது என மறுத்துவிட்டனர்.
வேலைநிறுத்தம் நடைபெற்று வரும் டெல்லி-ஹரியானா எல்லையில் உள்ள சிங்குவில் வேலைநிறுத்தம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். விவசாய சட்டம் மூன்றையும் ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் எனவும் விவசாயிகள் அறிவித்துவிட்டனர். மேலும் மற்ற மாநிலங்களில் உள்ள விவசாயிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளதால் போராட்டப் பகுதியில் உள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போராட்டத்தில் இருந்து ஒரு அங்குலம் கூட பின்வாங்கக்கூடாது என்று போராட்டக்காரர்கள் உறுதியாக தெரிவித்துவிட்டனர்.