புதுடெல்லி (22 ஏப் 2020): தலைமறைவாக இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை தப்லீக் ஜமாத் தலைமை இமாம் மவுலானா சாத் கந்தல்வி மறுத்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவ டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் தப்லீக் ஜமாத் நடத்திய ஆலோசனை கூட்டமே காரணம் என்பதாக அரசும் ஊடகங்களும் மாறி மாறி குற்றச்சட்டுகளை பதிவு செய்த நிலையில், தற்போது அந்த குற்றச் சாட்டுகள் பொய் என்பது தெளிவாகிறது.
இந்நிலையில் இச்சம்பவத்திற்கு பிறகு தப்லீக் ஜமாத் தலைமை இமாம் மவுலானா சாத் கந்தல்வி முதன் முதலாக மனம் திறந்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “நான் தலைமறைவாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அப்படி எதுவும் இல்லை. மருத்துவரின் ஆலோசனைப் படி தனிமைப் பட்டு இருந்தேன். என் மீது வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறையினருக்கு தெரியும்.” என்றார்.
மேலும், “நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டதாக அறிவிக்கபப்ட்டவுடன், ஆலோசனை கூட்டம் உடனே நிறுத்தப் பட்டது. உடனே எங்கள் ஜமாத் குழுவினர் சிலர் நிஜாமுத்தீன் காவல் நிலையத்திற்கு சென்று வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களை அனுப்ப ஏற்பாடு செய்ய கோரியிருந்தோம். ஆனால் அங்கிருந்து சரியான பதில் இல்லை. எங்கள் வாகனங்களையே ஏற்பாடு செய்வதாகவும் கோரியிருந்தோம் அதற்கும் சரியான பதில் இல்லை. இதனால் பலர் மர்கஸிலேயே தங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஆனால் மாறாக எங்கள் மீது பல்வேறு அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.
இதற்கு நான் யாரையும் குற்றம் சொல்ல மாட்டேன். சூழல் அவ்வாறு அமைந்து விட்டது. எங்களுக்கும் சரி, அதிகாரிகளுக்கும் சரி சரியான வழிகாட்டல் இல்லை என்றே நினைக்கிறேன். இதுபோன்ற சூழல்கள் நமக்கு புது அனுபவம் என்பதால் எல்லோருமே குழப்பத்தில் இருந்தோம்.” என்றார்.
தப்லீக் ஜமாத்தின் முக்கிய பணி குறித்து விளக்கம் அளித்த இமாம் மவுலானா சாத் கந்தல்வி,”தப்லீக் ஜமாத்தின் முக்கிய பணி, முஸ்லிம்களாக இருந்து கொண்டு சரியான வழிபாடு இல்லாதவர்களை சீர்படுத்துவதே எங்கள் பணி. இது அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டது. இதில் எந்த அரசியல் தலையீடுக்கும் இடமில்லை. இது இன்றல்ல தப்லீக் ஜமாத் தொடங்கப்பட்ட 1926 முதலே அவ்வாறுதான் செயல்படுகிறது. அப்படியிருக்க எங்கள் மீது எப்படி தவறான குற்றச்சட்டுகளை பதிவு செய்ய முடியும்?” என்றார்.
மேலும் தப்லீக் ஜமாத்தினர் பலர் கொரோனா பாஸிட்டிவ் என்பதும் அவர்களில் பலர் குணமகிக் கொண்டு இருப்பதும் தெரிய வருகிறது. அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அதேவேளை குணமாகிய அனைத்து தப்லீக் ஜமாத்தினருக்கும் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். நீங்கள் உங்களது பிளாஸ்மாவை மற்ற நோயாளிகளுக்கு கொடுக்க முன் வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அதில் ஜாதி, மதம் எதுவும் பார்க்க வேண்டாம் யாரெல்லாம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்களோ அனைவருக்கும் உங்கள் பிளாஸ்மாவை கொடுத்து உடவுங்கள். நாம் அனைவரும் ஆதமின் பிள்ளைகளே.” என்றார்.