ஏழை தொழிலாளர்கள் யாக்கூப், அம்ரீத்: இணைபிரியாத நண்பர்களின் சோக சம்பவம்!

Share this News:

போபால் (18 மே 2020): புலம்பெயர்ந்த தொழிலாளர்களும், இணைபிரியாத நண்பர்களுமான முஸ்லிம் யாக்கூப் மற்றும் இந்துவான அம்ரீத் இருவருக்கும் இடையேயான இணைபிரியாத நட்பை சுட்டிக்காட்டும் சம்பவம் இது.

யாக்கூப் மற்றும் அம்ரீத் இருவரும் குஜராத்தில் பணிபுரிந்து வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். ஊரடங்கு காரணமக வேலை இழந்து, இருவரும் சொந்த மாநிலமான உத்திர பிரதேசத்தை நோக்கி ஒரு ட்ரக்கில் ரூ 4000 கொடுத்து அதில் இருக்க இடமில்லாமல் நின்று கொண்டே பயணித்தனர். அதில் 50 முதல் 60 பேர் பயணித்தனர்.

ட்ரக் மத்திய பிரதேசம் மாநிலம் வழியாக சென்று கொண்டிருந்தபோது, ஒரு கட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே அம்ரீத் உடல் நிலை சோர்ந்து வாந்தி எடுக்க தொடங்கிவிட்டார். இதனால் மற்ற பயணிகள் அம்ரீத்துக்கு கொரோனா இருக்கக் கூடும் என நினைத்து பாதி வழியிலேயே இறக்கி விட்டனர். ஆனால் யாக்கூபுக்கு அம்ரீத்தை தனியாக விட மனமில்லாமல் அம்ரீத்துக்கு துணையாக அவரும் இடையிலேயே ட்ரக்கை விட்டு இறங்கிவிட்டார்.

அம்ரீத் அதிகமாக சோர்வடையவே மத்திய பிரதேசத்தின் சிவ்புரி மாவட்டத்தில் ஒரு சாலையின் ஓரத்தில் தனது நண்பர் யாக்கூபின் மடியில் படுத்துக் கொண்டார் அம்ரீத். வழியில் சென்ற பல வாகனங்களை யாக்கூப் உதவிக்கு அழைத்தார். எனினும் யாரும் உதவ முன் வரவில்லை. இந்நிலையில் அம்ரீத் யாக்கூபின் மடியிலியேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தெரிவித்த சிவ்புரி டாக்டர் பி கே கரே,” அம்ரித் கொரோனாவால் பாதிக்கப்பட்டாரா? என்பது முடிவுகள் வந்த பின்பே தெரியும். ஏனென்றால் அம்ரிதுக்கு அதிக காய்ச்சல் இருந்தது, மேலும் வாந்தியும் இருந்தது. எனினும் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறோம்” என்றார்,

யாக்கூபும் கொரோனா பரிசோதனை முடிவுக்காக காத்திருப்பதால் அவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

ஊரடங்கால் பல லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையிழந்து அவரவர்களின் சொந்த மாநிலங்களுக்கு நடந்தே செல்லும் அவலங்களை சமூக ஊடங்கள் மூலம் கண்டோம். பலர் உயிரிழந்தனர். பலர் விபத்துக்களில் சிக்கினர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் இல்லாமல் திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் என்று எதிர் கட்சிகள் குரல் எழுப்பினாலும் அரசு அதனை செவிமடுக்கவில்லை.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு உள்ளிட்ட தேவைகளை அரசு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட பொதுநல மனுவும் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Share this News: