மதக்கலவரத்தை உண்டாக்க முயலும் பாஜக எம்பி பிரக்யாசிங் தாக்கூருக்கு எதிராக103 முன்னாள் அரசு அதிகாரிகள் கடிதம்!

Share this News:

புதுடெல்லி (07 ஜன 2023): பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் எம்பி பதவிக்கு தகுதியற்றவர் என்றும் அவர் எடுத்த சத்திய பிரமாணத்தை மீறுவதாகக் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 103 முன்னாள் அதிகாரிகள் திறந்த கடிதம் எழுதியுள்ளனர்.

சமீபத்தில் கர்நாடகாவில் இந்து ஆதரவு அமைப்பு நடத்திய ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரக்யாசிங் தாக்கூர் இந்துக்கள் அவர்களது வீடுகளில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருக்க வேண்டும் என்று வன்முறையை தூண்டும் வகையில் பேசியிருந்தார்.

மேலும் ‘உங்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்துக் கொள்ளுங்கள். வேறொன்றுமில்லை என்றால், காய்கறிகளை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் கத்திகளையாவது கூர்மையாக வைத்திருங்கள். எப்போது, ​​என்ன சூழ்நிலை ஏற்படும் என்று யாருக்கும் தெரியாது. ஒவ்வொருவருக்கும் தற்காப்பு உரிமை உண்டு. யாராவது எங்கள் வீட்டிற்குள் நுழைந்து எங்களைத் தாக்கினால் அதற்குத் தகுந்த பதிலடி கொடுப்பது எங்கள் உரிமை”என்று பிரக்யாசிங் தாக்கூர் பேசியிருந்தார்.

இந்நிலையில் அவரின் பேச்சுக்கு எதிராக திறந்த கடிதம் ஒன்றை 103 முன்னாள் அரசு அதிகாரிகள் திறந்த கடிதம் எழுதியுள்ளனர். ராஜஸ்தான் மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் சலாவுதீன் அகமது, மத்திய சமூக நீதித்துறை முன்னாள் செயலாளர் அனிதா அக்னிஹோத்ரி, மத்திய போக்குவரத்து அமைச்சகத்தின் முன்னாள் கூடுதல் செயலாளர் எஸ்.பி.அம்புரோஸ் ஆகியோர் அந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

அந்த கடிதத்தில் பிரக்யா சிங் தாக்கூர் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்கு மறைமுக அழைப்பு விடுக்கிறார். புத்திசாலித்தனமாக கிரிமினல் வழக்குகளை தவிர்ப்பதற்காக முஸ்லிம்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் முஸ்லிம்களை மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறார்.

எனவே லோக்சபா சபாநாயகர் மற்றும் நெறிமுறைக் குழு பிரக்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் அவர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது எடுத்த சத்தியப் பிரமாணத்தை மீறியதாகவும் முன்னாள் அதிகாரிகள் கூறியுள்ளனர்.


Share this News:

Leave a Reply