புதுடெல்லி (26 ஏப் 2022) : நாட்டில் வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு பிரதமர் மோடியை வலியுறுத்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட 108 முக்கிய பிரமுகர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
இதுகுறித்த அந்த கடிதத்தில் “முன்னாள் அரசு ஊழியர்களாகிய நாங்கள், இதுபோன்ற தீவிர வார்த்தைகளை வெளிப்படுத்த விரும்புவதில்லை, ஆனால் நமது நாட்டின் தந்தைகளால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு கட்டிடம் இடிக்கப்பட்டு வருகிறது, இது எங்கள் கோபத்தையும் வேதனையையும் வெளிபடுத்தத் தூண்டுகிறது.
பாஜக ஆளும் மாநிலங்களான அசாம், குஜராத், ஹரியானா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் கடந்த சில ஆண்டுகளாக சிறுபான்மை சமூகங்கள், குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு வன்முறைகள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.
உங்களது வாக்குறுதியை மனதில் கொண்டு, உங்கள் மனசாட்சியை தொட்டு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். பாகுபாடுகளைக் கருத்தில் கொள்ளாமல், உங்கள் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அரசாங்கங்கள் செயல்படுத்தும் வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நீங்கள் அழைப்பு விடுப்பீர்கள் என்பது எங்கள் அன்பான நம்பிக்கை..” என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
டெல்லியின் முன்னாள் லெப்டினன்ட் கவர்னர் நஜீப் ஜங், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங், முன்னாள் உள்துறை செயலாளர் ஜி.கே. பிள்ளை மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் முதன்மைச் செயலாளர் டி.கே.ஏ. நாயர் ஆகியோர் கடிதத்தில் கையெழுத்திட்ட முக்கியப் பிரமுகர்கள் ஆவர்.