புதுடெல்லி (22 டிச 2020): டெல்லி கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் இஷ்ரத் ஜஹானுக்கு சிறையில் சக கைதிகளால் கடும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப் பட்டதாக அளிக்கப் பட்ட புகாரை அடுத்து நீதிமன்றம் இஸ்ரத்துக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க உத்தரவிட்டுள்ளது,.
ஜஹான் அளித்துள்ள புகாரில்,”நான் ஒரு தவறான புகாரில் தண்டிக்கப்படுகிறேன். இது ஒரு மாதத்தில் நடந்த இரண்டாவது சம்பவம். செவ்வாய்க்கிழமை காலை 6:30 மணியளவில், அவர்கள் (கைதிகள்) என்னை மோசமாக அடித்து வாய்மொழியாக துஷ்பிரயோகம் செய்தனர். அவர்கள் என்னை ஒரு பயங்கரவாதி என்று அழைக்கிறார்கள். “என்று ஜஹான் புகாரில் தெரிவித்துள்ளார்..
இந்த மனு டெல்லி நீதிமன்றத்தில் விசாரனைக்கு எடுக்கப் பட்டது.. இதனை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி அமிதாப் ராவத், சிறை அதிகாரிகளுக்கு இஷ்ரத் ஜஹானின் பாதுகாப்பை உறுதி செய்யவும் , இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மேலும் இந்த பிரச்சினையை தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், அவரை வேறு சிறைக்கு மாற்ற வேண்டிய அவசியம் உள்ளதா? என்றும் விரிவான அறிக்கையை புதன்கிழமை சமர்ப்பிக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக இதுபோன்ற சம்பவம் நடந்திருக்கிறதா? என்று நீதிபதி மண்டோலி சிறை உதவி கண்காணிப்பாளரிடம் கேட்டபோது, அவர் அதை உறுதிசெய்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இதற்கு நீதிபதி சிறை அதிகாரியிடம், “இஸ்ரத் (ஜஹான்) மிகுந்த அச்சத்தில் இருப்பதாகத் தெரிகிறது. தயவுசெய்து அவருடைய அச்சத்தை போக்க உரிய நடவடிக்கை எடுக்கவும். மேலும் என்ன நடவடிக்கைகள் எடுக்கப் படுகின்றன என்பது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுங்கள்.” என்று நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் இஸ்ரத் ஜஹானை வீடியோ காண்ஃபரன்ஸிங் மூலம் புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி சிறை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.