ஜார்கண்ட் (30 ஜூன் 2021): ஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட் போன் இல்லாத ஏழை சிறுமியிடம் வெறும் 12 மாம்பழங்களை ரூ.1.2 லட்சத்திற்கு வாங்கி போன் வாங்க உதவி புரிந்துள்ளார் தொழிலதிபர் ஒருவர்.
கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்பட்டு அனைத்து வகுப்புகளும் ஆன்லைனில் நடத்தப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மாணவர்கள் ஸ்மார்ட் போனில் வகுப்புகளை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜார்கண்டின் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி துளசி குமாரி, ஆன்லைன் மூலம் படிக்க ஸ்மார்ட்போன் இல்லாமல் கஷ்டப்பட்டுள்ளார்.
அவரது ஏழை பெற்றோர்களாலும் உதவ முடியவில்லை. உடன் ஒரு முடிவெடுத்த துளசி, வீதிகளில் மாம்பழங்களை விற்று பணத்தைச் சேகரிக்க ஆரம்பித்தார்.
துளசியின் இத் துயர நிலையை சமூக வலைத்தளம் மூலம் உணர்ந்த மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் அமேயா என்பவர், 1 மாம்பழத்திற்கு ரூ. 10 ஆயிரம் என 12 மாம்பழங்களை ரூ.1.2 லட்சத்திற்கு வாங்கினார். மேலும் சிறுமி ஸ்மார்ட் போன் வாங்கவும் உதவி புரிந்துள்ளார்.
இதுகுறித்து தொழிலதிபர் அமேயர் தெரிவிக்கையில், “நாட்டில் இதுபோன்று ஆர்வமிருந்தும், கற்க வழியில்லாமல் ஏராளமான மாணவர்கள் உள்ளனர். எனினும் அவர்களில் ஒருவரான துளசியின் முயற்சியும் நம்பிக்கையும் என்னை மிகவும் கவர்ந்தது. எனவே அவருக்கு உதவும் நோக்கத்தில் இதனை செய்தேன். இப்போது துளசியின் முகத்தில் மகிழ்ச்சியை காண்கிறேன்!” என்றார்.