கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது – குஜராத் அரசு!

Share this News:

புதுடெல்லி (03 டிச 2022): 2002 குஜராத் கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்க அனுமதிக்க முடியாது என்று குஜராத் அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

2002 ஆம் ஆண்டு அயோத்தியிலிருந்து யாத்ரீகர்கள் மற்றும் கரசேவகர்களை ஏற்றிக்கொண்டு திரும்பிக் கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ், குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையம் அருகே தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் 29 ஆண்கள், 22 பெண்கள், 8 குழந்தைகள் உட்பட 59 பேர் உயிரிழந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு ஜாமீன் மனுவை பரிசீலித்து வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 17-18 ஆண்டுகளாக சிறையில் இருப்பதாகவும், குறைந்தபட்சம் கல் வீசிய குற்றச்சாட்டை எதிர்கொள்பவர்களாவது ஜாமீன் பெற பரிசீலிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக குஜராத் அரசின் நிலைப்பாடு கேட்கப்பட்டது.

இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது என குஜராத் அரசு விளக்கம் அளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஜாமீன் மனு மீதான தனது நிலைப்பாட்டை குஜராத் அரசு தெளிவுபடுத்தியது. குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நீதிமன்றத்தில் தெரிவித்தார். இது வெறும் கல் வீச்சு சம்பவம் அல்ல. எரியும் ரயிலில் இருந்து உயிர் தப்பியவர்கள் தடுக்கப்பட்டனர். சபர்மதி எக்ஸ்பிரஸை எரித்த பிறகு, பயணிகள் தப்பாமல் இருக்க கற்கள் வீசப்பட்டன. வெளியில் இருந்து வந்தவர்கள் மீட்க வருவதைத் தடுத்ததாகவும், அந்தக் குழு அவர்களை குறிவைத்ததாகவும் துஷார் மேத்தா கூறினார்.

அதே நேரத்தில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவரின் பங்கையும் ஆராய்ந்த பிறகு, ஜாமீன் வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் மேத்தா தெரிவித்துள்ளார். பின்னர் விசாரணை நடத்தி அறிக்கையை இம்மாதம் 15ஆம் தேதி சமர்ப்பிக்குமாறு சொலிசிட்டர் ஜெனரலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.


Share this News:

Leave a Reply