மும்பை (07 மார்ச் 2020): ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்கு முந்தைய நாள் குஜராத்தில் இயங்கும் ஒரு நிறுவனம், யெஸ் வங்கியிலிருந்து ரூ.265 கோடியை வங்கியில் இருந்து எடுத்துள்ள திடுக்கிடும் தகவல் வெளியே வந்துள்ளது.
யெஸ் வங்கி நிா்வாகத்தையும் தன்வசம் எடுத்துக் கொண்டுள்ள ஆா்பிஐ, பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி பிரசாந்த் குமாரை யெஸ் வங்கி நிா்வாகியாக அறிவித்துள்ளது. யெஸ் வங்கி வாராக்கடன் சுமையால் பெரிய அளவிலான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.
இந்நிலையில் யெஸ் வங்கியில் இருந்து வாடிக்கையாளா்கள் அதிகபட்சமாக ரூ.50,000 மட்டுமே எடுக்க முடியும் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வியாழக்கிழமை அறிவித்தது. அதற்கு ஒரு நாள் முன்பு, அந்த நிறுவனம் ரூ.265 கோடியை எடுத்துள்ளது.
வதோதரா நகராட்சியின் கீழ் செயல்படுத்தப்படும் சிறப்பு தேவைக்கான வாகனங்கள் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள வதோதரா ஸ்மார்ட் சிட்டி டெவலப்மென்ட் கம்பெனி, யெஸ் வங்கியில் இருந்து ரூ.265 கோடியை எடுத்துள்ளது.
யெஸ் வங்கி மட்டுமல்லாமல் 6 மாதங்களுக்கு முன்பு, மகாராஷ்டிரத்தில் செயல்பட்டு வந்த பஞ்சாப்-மகாராஷ்டிரா கூட்டுறவு (பிஎம்சி) வங்கி கடன் முறைகேட்டில் சிக்கியதை அடுத்து, ஆா்பிஐ இதேபோன்று பணம் எடுக்க கட்டுப்பாடுகளை விதித்தது. அப்போது, அந்த வங்கி வாடிக்கையாளா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனா்.
மத்திய அரசின் நிர்வாக திறமையின்மையே இதுபோன்ற வங்கிகளின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்டவர்கள் விமர்சித்து வருகின்றனர்.