புதுடெல்லி (29 நவ 2020): நாளுக்கு நாள், நாட்டில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. பாலிவுட் நட்சத்திரம் டாப்சிக்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்தியாவின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், டிவிட்டரில் விவசாயிகளுக்கு ஆதரவாக இட்டுள்ள பதிவில், “விவசாயிகள் நமக்கு உணவளிப்பவர்கள். அவர்களுக்காக நாம் நேரம் ஒதுக்க வேண்டும். அவர்களின் குரலை செவி கொடுத்து கேட்க வேண்டும் , அது நியாயமல்லவா?. “தயவுசெய்து விவசாயிகளின் கோரிக்கையை கேளுங்கள்” என்று ஹர்பஜன் சிங் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே போராட்டக் களத்தில் ஒரு விவசாயி போலீஸ்காரருக்கு தண்ணீர் கொடுக்கும் படம் நேற்று வைரலாகியது. அதேபோல ஹரியானாவின் கர்னாலில் உள்ள சீக்கியர், விவசாயிகளைத் தடுக்க முயற்சிக்கும் காவல்துறையினருக்கு இலவச உணவைத் தயாரித்து வழங்குகிறார். .சீருடையில் இருக்கும் போலீஸ்காரர்கள் இரண்டு வரிசைகளில் அமர்ந்து பரிமாறப்படும் உணவை சாப்பிடுகிறார்கள்.
ஒருபுறம் காவல்துறையினர் விவசாயிகளை கண்ணீர் புகை மூலமும், தடியடி மூலமும் தாக்குதல் நடத்தினாலும். இதுபோன்ற நெகிழ வைக்கும் சம்பவங்களும் அங்கு நடைபெறுகின்றன.