மும்பை (21 ஜூன் 2021): காசியாபாத்தின் முஸ்லீம் முதியவர் தாக்கப்பட்ட வீடியோவைப் பகிர்ந்ததற்காக பத்திரிகையாளர் ராணா அயூப் மீது தாக்கல் செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் தொடர்பாக மும்பய் உயர் நீதிமன்றம் ராணா அயூபிற்கு முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
முஸ்லீம் முதியவர் தாக்கப்பட்ட வீடியோவை, அதன் நம்பகத்தன்மையை சரிபார்க்காமல் ராணா ட்விட்டரில் பகிர்ந்ததாக ராணா அயூப் மீது குற்றம் சாட்டப்பட்டது. காஜியாபாத் லோனி பார்டர் போலீசார் ராணா அயூப் மீது 153, 153 ஏ, 295 ஏ, 505 மற்றும் 120 பி பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
ராணா அயூப் தாக்கல் செய்த மனுவை நீதிபதி பிரகாஷ் டி நாயக் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. வழக்கறிஞர் மிஹிர் தேசாய் ராணா அயூப் சார்பில் வாதாடினார். அப்போது, ராணா அயூப் மகாராஷ்டிராவில் வசிக்கும் ஒரு பத்திரிகையாளர் என்றும், அந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதன் அடிப்படையில் மட்டுமே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதேபோல் பலர் வீடியோவை பதிவேற்றியுள்ளதாகவும் வழக்கறிஞர் மிஹிர் தேசாய் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும் மேற்கண்ட ட்வீட்டை ராணா அயூப் நீக்கியதாக தேசாய் மேலும் கூறினார்.
இதனை அடுத்தது இதனை விசாரித்த நீதிபதிகள் ராணா அயூபிற்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். மேலும் ராணா அயூபிற்கு நான்கு வாரங்கள் கைது செய்யப்படுவதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
காசியாபாத்தை சேர்ந்த முஸ்லீம் முதியவர் அப்துல் சமத் சைஃபி என்பவரை, ஆட்டோவில் கடத்தி தாடியை கத்தரித்து, காட்டும் வகையிலும், அவரை அடித்து, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று அழைக்கும்படி கட்டாயப்படுத்தியதாகவும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது குறிப்பிடத்தக்கது. இதனை பகிர்ந்ததற்காக ராணா அயூப் மீது காஜியாபாத் போலீசார் வழக்கு பதிந்திருந்தனர்.