புதுடெல்லி (27 ஜூன் 2021): இந்தியாவில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் சர்வதேச விமான போக்குவரத்து ஜூன் 30- ஆம் தேதிக்கு பிறகு தொடங்கவிருப்பதாகவும், அதற்கான பணிகளில் விமான போக்குவரத்து ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு கரோனா தடுப்பூசிப் போடுவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு கரோனா தடுப்பூசி சான்றிதழில் தங்களது பாஸ்போர்ட் எண்ணையும் இணைத்து சான்றிதழ் பெறும் வகையில் ‘கோவின்’ இணையதளத்தில் சிறப்பு வசதியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, http://cowin.gov.in என்ற மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ‘கோவின்’ (Co-WIN) இணைய தளத்திற்கு சென்று ‘Raise an Issue’ என்ற தெரிவில் ‘பாஸ்போர்ட் விருப்பத்தை’ தேர்வு செய்து, பாஸ்போர்ட் விவரங்களைக் குறிப்பிட்டு புதிய கரோனா தடுப்பூசி சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வோர் எந்த வித சிரமமின்றிப் பயணம் மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால், உலகில் பல்வேறு நாடுகளும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை மட்டுமே தங்கள் நாட்டிற்குள் வர அனுமதிக்கின்றன.