கர்ப்பிணிப் பெண் வயிற்றில் துப்பாக்கிச் சூடு – உத்திர பிரதேசத்தில் நடந்த கொடூரம்!

Share this News:

லக்னோ (01 ஜன 2023): உத்தரபிரதேச மாநிலம் மஹோபாவில் கர்ப்பிணி பெண் ஒருவர் வயிற்றில் மான் வேட்டைக்கு வந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் தாய் மற்றும் வயிற்றில் உள்ள சிசு கவலைக்கிடமாக உள்ளது.

வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த 30 வயது பெண் வந்தனா மீது இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது, பலத்த காயம் அடைந்த கர்ப்பிணி பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து வந்தனாவின் கணவர் பூபேந்திர சிங் ராஜ்புத் கூறுகையில், மானை வேட்டையாட அருகில் வந்த இருவர் இந்த கொடூர செயலை செய்துள்ளனர். சிங் தனது மனைவியுடன் வயல்களில் வேலை செய்தபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறினார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரும் தப்பி ஓடிவிட்டனர் என்று பூபேந்திர சிங் கூறினார். பலத்த காயம் அடைந்த வந்தனா, சமூக நல மையத்துக்கும், பின்னர் ஜான்சியில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வந்தனா மற்றும் கருவில் இருக்கும் குழந்தையின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களைப் பிடிக்க தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.


Share this News:

Leave a Reply