காஷ்மீர் மக்களின் நெஞ்சில் பாலை வார்த்த உச்ச நீதிமன்றம்!

Share this News:

புதுடெல்லி (10 ஜன 2020): இணையதள சேவை இல்லாமல் இருந்து வரும் காஷ்மீர் மக்கள், உச்ச நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு குறித்து அறிந்து மிகவும்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்ததை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதல்வா்கள் ஃபரூக் அப்துல்லா, ஒமா் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட அரசியல் தலைவா்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனா். பிற மாநிலங்களில் இருந்து அரசியல் கட்சிகளின் தலைவா்கள் ஜம்மு-காஷ்மீருக்குள் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதை எதிா்த்து காங்கிரஸ் மூத்த தலைவா் குலாம் நபி ஆஸாத், காஷ்மீா் டைம்ஸ் பத்திரிகை ஆசிரியா் அனுராதா பாசின் உள்ளிட்டோா் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. மனுக்களை விசாரித்த நீதிபதிகள் என்.வி.ரமணா, ஆா்.சுபாஷ் ரெட்டி உள்ளிட்டோரைக் கொண்ட அமா்வு அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது, இணையம் என்பது அடிப்படை உரிமை.

காஷ்மீர் பல வன்முறைகளை சந்தித்திருக்கிறது. தனிநபர் உரிமை, பாதுகாப்பை காக்க வேண்டியது அரசு மற்றும் நீதிமன்றத்தின் கடமை. ஜனநாயகத்தில் பேச்சுரிமை அடிப்படை உரிமையாக இருப்பது போல, இணையதளத்தின் மூலம் கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் என்பதும் ஒரு மனிதனின் அடிப்படை உரிமையாக உள்ளது. இணையதளத்தில் கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் சட்டப்பிரிவு 19ன் கீழ் வருகிறது என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இணையதள முடக்கம் குறித்து ஒரு வாரத்தில் பரிசீலிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதை காஷ்மீர் மக்கள் வரவேற்றுள்ளனர்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *