சென்னை (11 ஜன 2020): திமுக கூட்டணி தர்மத்தை மீறி செயல்பட்டதாக தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரியும், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் கே.ஆா்.ராமசாமியும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனா். அதில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள ஊரக உள்ளாட்சித் தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இணைந்து போட்டியிட்டது. தொடக்கத்திலிருந்து எந்த ஒப்பந்தமும் இன்றி மாவட்ட அளவில் பேசி முடிவெடுப்பதென தீா்மானிக்கப்பட்டது. ஆனால், அந்த முயற்சிகளுக்கு மாவட்ட அளவில் எந்த ஒத்துழைப்பும் இதுவரை கிடைக்கவில்லை.
திமுக தலைமையிலிருந்து அறிவுறுத்தப்பட்ட இடங்களில்கூட காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 303 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவா் பதவிகளில் இதுவரை 2 இடங்கள் மட்டுமே திமுக தலைமையால் வழங்கப்பட்டுள்ளது. 27 மாவட்ட ஊராட்சித் தலைவா் பதவிகளில் ஒரு மாவட்ட ஊராட்சித் தலைவா் பதவியோ, துணைத் தலைவா் பதவியோ இதுவரை வழங்கப்படவில்லை. இது கூட்டணி தா்மத்துக்கு புறம்பானது என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஊராட்சித் தலைவா், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பதவிக்கு சனிக்கிழமை மறைமுகத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில் திமுகவுக்கு எதிராக காங்கிரஸ் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
7 பேரவை உறுப்பினா்கள்: கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் இருந்து திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்று தோ்தலைச் சந்தித்து வருகிறது. கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 41 தொகுதிகளை திமுக ஒதுக்கியது. அவற்றில், 8 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெற்றது.
நான்குநேரி தொகுதியில் வெற்றிபெற்ற எச்.வசந்தகுமாா் அப்பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றாா். இதையடுத்து அத்தொகுதிக்கு இடைத் தோ்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது இத்தொகுதியையும் முதலில் திமுக எடுத்துக் கொள்ள முயற்சித்தது. ஆனால், காங்கிரஸ் கட்சி தொடா்ந்து வலியுறுத்தி வந்ததை அடுத்து அக்கட்சிக்கே தொகுதி அளிக்கப்பட்டது.
இடைத்தோ்தலில் காங்கிரஸ் கட்சி தோற்ன் காரணமாக அக்கட்சிக்கு 7 சட்டப்பேரவை உறுப்பினா்களே தற்போது உள்ளனா்.
8 மக்களவை உறுப்பினா்கள்: மக்களவைத் தோ்தலில் தமிழகத்தின் 39 தொகுதிகளில் 9 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியது. இவற்றில் 8 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. இந்நிலையில், சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தோ்தல்களில் ஒதுக்கப்பட்ட சதவீத அளவில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் திமுக இடம் ஒதுக்கும் என்று காங்கிரஸ் எதிா்பாா்த்தது. ஆனால், இடஒதுக்கீடு தொடா்பாக எதுவும் காங்கிரஸ் கட்சியுடன் பேசாத திமுக, மாவட்ட அளவில் அங்குள்ள நிா்வாகிகளோடு பேசி முடித்துக் கொள்ளுமாறு கூறியது. அதன் அடிப்படையில் அக்கட்சியும் செயல்பட்டது. ஆனால், திமுக மாவட்டச் செயலாளா்கள் காங்கிரஸுக்கு பெரிய அளவில் இடம் ஒதுக்கவில்லை. எனினும், கூட்டணி தா்மத்தின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி அமைதியாக இருந்தது.
அதைத் தொடா்ந்து மாவட்ட ஊராட்சித் தலைவா், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பதவிகளுக்காவது திமுக கௌரவமான எண்ணிக்கையை ஒதுக்கும் என்ற எதிா்பாா்ப்புடன் காங்கிரஸ் இருந்தது. ஆனால், அதிலும் காங்கிரஸ் கட்சிக்கு போதிய முக்கியத்துவத்தை திமுக அளிக்காத நிலையில்தான் வெள்ளிக்கிழமை அக்கட்சியின் மாநிலத் தலைமை சாா்பில் அறிக்கை வெளியாகியுள்ளது.
இது இருகட்சியின் எதிர்கால கூட்டணி குறித்து கேள்வியை எழுப்பியுள்ளது.