திருவனந்தபுரம் (13 ஜூலை 2020): தங்கக் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட ஸ்வப்னா சுரேஷ் தீவிரவாத நடவடிக்கைகளுக்காக்வே தங்கக் கடத்தலில்ஈடுபட்டுள்ளதாக என்.ஐ.ஏ. குற்றம் சாட்டியுள்ளது.
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில், சரக்கு விமானத்தில் 30 கிலோ தங்கக்கட்டிகள் கடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்த, சுங்கத்துறை அதிகாரிகள், தங்கத்தை பெற்றுக் கொள்வதற்காக சென்ற, தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமாரை கைது செய்தனர். இக்கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகிய இருவரையும், என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று முன்தினம் பெங்களூருவில் கைது செய்தனர். இருவரும் கொச்சியில் உள்ள NIA நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், இருவரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இந்நிலையில், இதுவரையும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. சார்பில் என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், தங்க கடத்தலுக்காக அரபு அமீரகத்தின் முத்திரைகள் போலியாக பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும், தீவிரவாத நடவடிக்கைகளுக்கும் தங்க கடத்தல் சம்பவத்துக்கு தொடர்பு இருப்பதாகவும் என்.ஐ.ஏ. சார்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டிலேயே 18 கிலோ மற்றும் 9 கிலோ என இரு முறை தங்கம் கடத்தப்பட்டுள்ளது என்றும் என்.ஐ.ஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் இருவரையும் 21ம் தேதிவரை 8 நாட்கள் என்.ஐ.ஏ. காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது..