திருவனந்தபுரம் (16 டிச 2020): கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் – காங்கிரஸ் கம்யூனிஸ்ட் சம நிலையில் முன்னிலையில் உள்ளன.
கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடத்தி முடிக்கப் பட்டுள்ளன. கடந்த 8ம் தேதி முதல் கட்டத் தேர்தலும், 10ம் தேதி 2 ஆம் கட்டத் தேர்தலும், 14ம் தேதி இறுதிக்கட்ட தேர்தலும் நடைபெற்றது.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்ட இந்தத் தேர்தலில் 76 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த தேர்தலில் 77.76 சதவீதம் பதிவான நிலையில், இந்த தேர்தலில் வாக்குப்பதிவு சற்று குறைந்துள்ளது.
3 கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஆரம்பம் முதலே ஆளும் இடதுசாரி கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.
இன்று காலை 11 மணி நிலவரப்படி, மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளில் 4ல் இடதுசாரிகளும் (எல்டிஎப்), 2ல் காங்கிரஸ் கூட்டணியும் (யுடிஎப்) முன்னிலையில் இருந்தன.
86 நகராட்சிகளில் 38ல் இடதுசாரிகள், 39ல் காங்கிரஸ் கூட்டணியும், 3ல் பாஜக கூட்டணியும் (என்டிஏ) முன்னிலையில் இருந்தன. 14 மாவட்ட ஊராட்சிகளில் 11ல் இடதுசாரிகளும், 3ல் காங்கிரஸ் கூட்டணியும் முன்னிலையில் இருந்தன. 152 ஊராட்சி ஒன்றியங்களில் 93ல் இடதுசாரிகள் முன்னிலையில் இருந்தன. 56ல் காங்கிரஸ் கூட்டணியும், 3ல் பாஜகவும் முன்னிலையில் இருந்தன.
941 கிராம பஞ்சாயத்துகளில் இடதுசாரிகள் 403 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 341 இடங்களிலும், பாஜக கூட்டணி 29 இடங்களிலும், மற்றவை 56 இடங்களிலும் முன்னிலையில் இருந்தன.
தொடர்ச்சியான தேர்தல் அப்டேட்களுக்கு இந்நேரம்.காம் தளத்துடன் இணைந்திருங்கள்.