புதுடெல்லி (20 மார்ச் 2022): சரத் யாதவின் எல்ஜேடி லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடியுடன் பிரிந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்தது. டெல்லியில் உள்ள ஷரத் யாதவ் இல்லத்தில் இணைப்பு விழா நடைபெற்றது.
இணைப்பு குறித்து பேசிய சரத் யாதவ் “ஆர்ஜேடியுடன் எங்கள் கட்சி இணைவது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கான முதல் படியாகும். பாஜகவை தோற்கடிக்க இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது அவசியம். இப்போது நமது முன்னுரிமை ஒற்றுமைதான். அப்போதுதான் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு யார் தலைமை தாங்குவது என்று யோசிப்போம்.” என்றார்.
மேலும் சரத் யாதவ் கூறுகையில், “நாட்டில் வலுவான எதிர்க்கட்சி இருக்க வேண்டும் என்பதே நோக்கம். பழைய ஜனதா தளம் மற்றும் பிற ஒத்த கருத்துடைய கட்சிகளில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகளை ஒன்றிணைக்க நீண்ட காலமாக உழைத்து வருகிறேன். எனவே, முதல்படியாக எனது கட்சியான எல்ஜேடியை ஆர்ஜேடியுடன் இனிக்கிறேன்” என்று சரத் யாதவ் கூறினார்
ஆர்ஜேடி தேசிய செய்தி தொடர்பாளர் சுபோத் மேத்தா கூறுகையில், எல்ஜேடி-ஆர்ஜேடி இணைப்பு என்பது அடையாளமாக மட்டும் இல்லை. எதிர்க்கட்சி ஒற்றுமைக்கான முதல் படியாக இந்த இணைப்பு அமையும். ஷரத் யாதவ் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் மரியாதை பெற்றவர். தனது அனுபவச் செல்வம் RJDக்கு பயனளிக்கும் என்றார்.
1997ல் லாலு பிரசாத் யாதவால் ஆர்ஜேடி உருவாக்கப்பட்டது. தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலில் ஷரத்தும், லாலுவும் எதிரெதிரே நின்றனர். தற்போது LJD-RJD இணைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதபப்டுகிறது. நீதிமன்ற வழக்குகள் மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக லாலு பிரசாத் யாதவ் அரசியலில் ஈடுபடவில்லை. இதற்கிடையே இந்த இணைப்பின் மூலம் மீண்டும் தனது அரசியல் இருப்பை மீட்டெடுக்கும் நம்பிக்கையில் ஷரத் யாதவ் உள்ளார்.