புதுடெல்லி (20 பிப் 2020): குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தெலுங்கானா மாநில சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்ற இருப்பதால் மேலும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது மத்திய அரசு.
குடியுரிமை சட்டம் அமல்படுத்தப் பட்டது முதலே மத்திய அரசு தேன் கூட்டுக்குள் கைவிட்ட நிலையில் மாட்டிக் கொண்டுள்ளது அனைவரும் அறிந்ததே. ஏகப்பட்ட பிரச்சனைகளில் சிக்கிதவிக்கும் இந்தியாவிற்கு இச்சட்டம் அவசியம்தானா என பாஜகவின் கூட்டணி கட்சிகள் மட்டுமல்லாமல், பாஜக தலைவர்களில் சிலரும் மத்திய அரசை கேள்வி கேட்க தொடங்கினர்.
இந்நிலையில் இச்சட்டத்தை எதிர்த்து முதலில் கேரள மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி பாஜக அரசுக்கு அதிர்ச்சி கொடுத்தது. ஏதேதோ சொல்லிப் பார்த்தும், பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், புதுச்சேரி என பல மாநிலங்கள் இச்சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி நெருக்கடி கொடுத்த நிலையில், மிகவும் மோடி நம்பியிருந்த தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவும் கைவிரித்துவிட்டார். தற்போது அம்மாநில அமைச்சரவையும் வரும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற ஒப்புதல் அளித்துவிட்டது.
குடியுரிமை சட்டத்தை நடைமுறை படுத்துவதில் ஒரு அங்குலம் கூட பின்வாங்க மாட்டோம் என்று உறுதியாக இருக்கும் மோடி, அமித் ஷா தற்போது விழிபிதுங்கி நிற்கின்றனர்.