புதுடெல்லி (21 ஜூன் 2020): சுவாச மண்டலத்தை தாக்கும் கொரோனா வைரசிலிருந்த விடுபட யோகா செய்யுங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. கடந்த 2015-ம் ஆண்டு முதல், யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும், சர்வதேச யோகா தினத்தன்று பிரதமர், சிறப்பு நேரலை யோகா நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா தொற்றின் தீவிரம் காரணமாக, ஊரடங்கு அமலில் இருப்பதால், காணொலி வாயிலாக இன்று காலை நாட்டு மக்களிடம் அவர் உரையாற்றினார்.
கொரோனாவுக்கு எதிராக போராட நோய் எதிர்ப்பு சக்தி உதவும் என்று தெரிவித்த பிரதமர் , அதற்கு யோகா பயிற்சிகள் பயன்படும் எனக் கூறினார். சுவாச மண்டலத்தை தாக்கும் கொரோனா வைரசிலிருந்து விடுபட பிராணாயாமா மிகவும் உதவிகரமாக இருக்கும் எனத் தெரிவித்தார். யோகாவுக்கு நாடு, மொழி, இனம், நிறம் ஆகிய பேதங்கள் கிடையாது என்றும் பிரதமர் . நரேந்திர மோடி அப்போது குறிப்பிட்டார்.