புதுடெல்லி (14 ஏப் 2020): பிரதமர் மோடி ஏதாவது பேசினால் பொதுமக்களுக்கு ஏதாவது செய்யச் சொல்லி டாஸ்க் போல் கொடுப்பார். ஆனால் இன்று அப்படி எந்த அறிவிப்பும் வைக்கவில்லை.
கொரோனா பரவலை தொடர்ந்து பிரதமர் மோடி இன்று நாட்டு மக்கள் முன்னிலையில் மீண்டும் உரையாற்றினார். பிரதமர் மோடி தனது பேச்சில், இந்தியா முழுவதும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 21 நாள் ஊரடங்கு இன்று நிறைவடையும் நிலையில், அது மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. என்றார்.
ஆனால் வேறு எந்த புதிய அறிவிப்பையும் மோடி வைக்கவில்லை. ஏற்கனவே மோடி பேசும்போது, ஜனதா ஊரடங்கு அறிவித்தார். அப்போது நாள் முழுவதும் மக்கள் வீட்டிற்குள் இருக்க வேண்டும். மாலைக்கு பின், வீட்டு வாசலில் வந்து மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கைதட்ட வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால் பிரதமர் மோடியின் இந்த பேச்சைத் தவறாக புரிந்து கொண்ட பலர் வீட்டை விட்டு வெளியே வந்து கைதட்ட தொடங்கினார்கள். சாலையில் இறங்கி கொரோனாவை திருவிழா போல கொண்டாட தொடங்கினார்கள். முக்கியமாக தனி மனித விலகலை கடைபிடிக்காமல் சாலையில் இருந்து தட்டுகளில் குச்சி வைத்து வேகமாக தட்டி சத்தம் எழுப்பிக் கொண்டாடினார்கள். இது விமர்சனத்தை எழுப்பியது.
அதை தொடர்ந்து கடந்த 3ம் தேதி மக்கள் முன்னிலையில் பேசிய மோடி, மக்கள் எல்லோரும் வீட்டிற்கு வெளியே விளக்கு ஏற்ற வேண்டும். ஏப்ரல் 5ம் தேதி 9 மணிக்கு 9 நிமிடம் மின் சாதனங்களை அணைத்துவிட்டு விளக்குகளை ஏற்ற வேண்டும் என்று கூறி இருந்தார்.
ஆனால் இப்போதும் மக்கள் பலர் வெளியே வந்து வெடிகளை வெடித்தனர். கொரோனாவை தீபாவளி போல கொண்டாடினார்கள். வெளியே கூட்டம் கூட்டமாக வந்து கையில் தீப்பந்தம் ஏந்தியபடி சாலையில் சென்றார்கள். இதுவும் தனிமனித விலகலை தடுக்கும் வகையில் இருந்தது. மக்கள் பலர் இப்படி கூட்டம் கூட்டமாக வெளியே வந்தது விமர்சனங்களை சந்தித்தது.
இதனை தொடர்ந்து இன்றும் ஏதாவது அறிவிப்பார் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே அவரது அறிவிப்புகள் பல விமர்சனங்களை சந்தித்ததால் இன்று எந்த அறிவிப்புகளையும் வைக்கவில்லை என கூறப்படுகிறது.