லக்னோ (16 ஜன 2022): சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவின் மருமகள் அபர்ணா யாதவ் பாஜகவில் சேர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முலாயம் சிங்கின் இளைய மகன் பிரதிக் யாதவின் மனைவி அபர்ணா யாதவ் மற்றும் பாஜக இடையே கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2017 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் லக்னோ கான்ட் தொகுதியில் அபர்ணா யாதவ் போட்டியிட்டார். அவர் பாஜக வேட்பாளர் ரீட்டா பகுகுணா ஜோஷியிடம் 33,796 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
அபர்ணா யாதவ் வரவிருக்கும் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படுவார் என்ற புரிதலின் பேரில் பாஜகவில் இணைவார் என்று நம்பப்படுகிறது, இருப்பினும் இந்த முறை அவரை வேறு தொகுதியில் நிறுத்த பாஜக ஆர்வமாக உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிகின்றன.
பிப்ரவரி 10 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான 107 வேட்பாளர்களின் முதல் பட்டியலை சனிக்கிழமை பாஜக வெளியிட்டது. 44 ஓபிசி வேட்பாளர்கள் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அதைத் தொடர்ந்து உயர் சாதிகளைச் சேர்ந்த 43 பேரும், அட்டவணையில் உள்ளனர்.
2017 தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 303 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. இதற்கிடையே மற்ற 296 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பின்னர் அறிவிக்கும். அபர்ணா யாதவ் பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டால், அவரது பெயர் எதிர்கால வேட்பாளர் பட்டியலில் இடம்பெற வாய்ப்பு உள்ளது.