முஸ்லிம்களால்தான் உயிருடன் இருக்கிறேன் – பெங்களூரு கலவர சூத்திரதாரி நவீனின் தாய் நெகிழ்ச்சி!

Share this News:

பெங்களூரு (14 ஆக 2020): “முஸ்லிம் இளைஞர்களால்தான் நன் உயிருடன் இருக்கிறேன்” என்று பெங்களூரு கலவரத்திற்கு காரணமான நவீனின் தாய் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில், முகநூல் பதிவு ஒன்று கலவரத்திற்கு வித்திட்டது. இந்த கலவரத்தில் மூவர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய முகநூல் பதிவை எழுதிய நவீனின் தாயாரும் காங்கிரஸ் எம்எல்ஏ அகண்ட சீனிவாச மூர்த்தியின் சகோதரியுமான ஜெயந்தி கூறியதாவது:

“கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் நானும் என் மகளும் வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டு இருந்தோம். அப்போது வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது 50-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கத்தி கூச்சல் போட்டுக் கொண்டிருந்தனர். எங்கள் வீட்டு நுழைவாயிலை உடைத்து உள்ளே நுழைய முயன்றனர்.

உடனே நான் வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு, பேரப்பிள்ளைகளை தூக்கிக் கொண்டு மாடிக்கு ஓடினேன். அதற்குள் வீட்டுக்குள் நுழைந்து கார், இரு சக்கர வாகனம் மற்றும் வீட்டுப் பொருட்களுக்கு தீவைத்து விட்டு ஓடினர். அந்த சமயத்தில் எங்கள் பக்கத்து வீடுகளைசேர்ந்த 5 முஸ்லிம் இளைஞர்கள் உள்ளே நுழைந்து எங்களை காப்பாற்றினர்.

அந்த இளைஞர்கள் மட்டும் தக்க தருணத்தில் வரவில்லை என்றால் இந்நேரம் நான் உயிருடன் இருந்திருக்க மாட்டேன். அந்த இளைஞர்களை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். எங்கள் உயிரை காப்பாற்றி காரில் ஏற்றிவிட்ட அந்த இளைஞர்களை பார்த்த கலவர கும்பல், நீங்கள் மதத்துக்கு எதிராக செயல்படுகிறீர்கள் என திட்டினர்.

எங்கள் வீட்டுக்கு தீ வைத்தவர்களை இதற்கு முன் நான் பார்த்தது இல்லை. இந்த வன்முறைக்கு காரணம் என் மகனின் முகநூல் பதிவு மட்டும் அல்ல. ஒரு முகநூல் பதிவுக்காக ஊரில் உள்ள அப்பாவி பொதுமக்களை தாக்கி, அவர்களின் உடைமைகளை எரிப்பார்களா? அரசியல் ரீதியாக என் தம்பி அகண்ட சீனிவாச மூர்த்தியை அழிக்கும் நோக்கத்தில் இந்தக் கலவரத்தை செய்திருக்கின்றனர். போலீஸார் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *