ஜித்தா (28 பிப் 2020): டெல்லியில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (OIC) கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறையாளர்கள் புகுந்து கண்மூடித்தனமாக தாக்கியதில் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தலைமை காவலரும் ஐபி ஆபிசரும் அடங்குவர். கொடூரமான இந்த வன்முறை நிகழ்வுகள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளன. அதன் விளைவாக வியாழன் அன்று (27-2-2020), இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு இந்த வன்முறைக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
அப்பாவி முஸ்லிம்களைத் தாக்குவது, மசூதிகளுக்குத் தீ வைப்பது, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது போன்ற வன்முறைச் சம்பவங்களுக்கு தங்களின் கடும் கண்டனத்தை இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு பதிவு செய்துள்ளது. அத்துடன் மட்டுமின்றி, இந்தியாவில் முஸ்லிம்களுக்கும், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தளங்களுக்கும் தகுந்த பாதுகாப்பை வழங்குவதற்கு இந்திய அரசு அதிகாரிகள் உறுதி வழங்க வேண்டும் என்றும் இந்த இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (OIC) அறிவித்துள்ளது.