புதுடெல்லி (10 பிப் 2020): பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவை விடுதலை செய்யக்கோரி அவரது தங்கை சாரா அப்துல்லா உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
தேசிய மாநாட்டு கட்சி தலைவர்கள் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தி ஆகியோர் கைது செய்யப்பட்டு, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பரூக் அப்துல்லா, ஏற்கனவே பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறைபிடிக்கப்பட்ட இவர்கள் ஒரு ஆண்டுக்கு எந்த விசாரணையும் இன்றி, சிறையிலோ, வீட்டுக்காவலிலோ வைத்திருக்க முடியும்.
இந்நிலையில், பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஒமர் அப்துல்லா சிறைபிடிக்கப்பட்டதை எதிர்த்து, அவரது தங்கை சாரா அப்துல்லா, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “ஒமர் அப்துல்லா பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறைபிடிக்க எந்த முகாந்திரமும் இல்லை; அதற்கு உரிய சரியான காரணங்கள் குறிப்பிடப்படவில்லை. எம்.பி., முதல்வர், மத்திய அமைச்சர் போன்ற முக்கிய பதவிகளை வகித்த ஒருவரை, இந்த சட்டத்தின் கீழ் சிறைபிடிப்பது அரிதான விஷயம்.
நாட்டில், ஒவ்வொரு தனி நபரின் சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. எனவே, பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஒமர் அப்துல்லா சிறைபிடிக்கப் பட்டதை ரத்து செய்து, அவரை விடுவிக்கும்படி உத்தரவிட வேண்டும்.” இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
சாரா சார்பில், மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, இந்த மனுவை அவசரமாக விசாரிக்கும்படி முறையிட்டார். அவரது கோரிக்கையை, நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு ஏற்று, வழக்கை அவசரமாக விசாரிக்க பட்டியலிடும்படி பதிவாளருக்கு உத்தரவிட்டது.