புதுடெல்லி (17 மே 2020): ஆன்லைன் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இ-வித்யா என்ற புதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 1 முதல் 12 வரை ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு டிவி சேனல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தெரிவித்தார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து ரூ.20 லட்சம் கோடி திட்டத்திற்கான இறுதி கட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்..
அப்போது பேசிய அவர், கல்வித்துறைக்கு புதிதாக 12 தொலைக்காட்சிகள் உருவாக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கல்விக்காக ஏற்கெனவே 3 தொலைக்காட்சி அலைவரிசைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந் நிலையில் மேலும் 12 அலைவரிசைகள் உருவாக்கப்படவுள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் மூலம் கல்வி கற்க தேவையான முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், டிடிஎச் நிறுவனங்கள் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் கல்வி தொடர்பாக ஒளிபரப்ப கேட்டுக் கொள்ளப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
கொரோனா காலத்தில் ஆன்லைனில் புதிதாக 200 மின்னனு பாடப்புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், கொரோனா காலத்தில் தொழில்நுட்பங்கள் மூலம் ஆன்லைன் கல்வியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.