ஷஹீன் பாக் ஜாலியன் வாலாபாக்காக மாறும் அபாயம் – உவைசி எச்சரிக்கை!

Share this News:

புதுடெல்லி (06 பிப் 2020): டெல்லி ஷஹின் பாக் போராட்டக் காரர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தக்கூடும் வாய்ப்பு இருப்பதாக ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் உள்ள ஷாஹீன் பாக் பகுதியில் கடும் குளிர் பனியையும் பொருட்படுத்தாமல் இடைவிடாது தொடர் போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் மற்றும் ஜனநாயக அமைப்பினர் கலந்துகொண்டுள்ளனர். இந்த போராட்டத்தால் வெறுப்படைந்துள்ள இந்துத்வா கும்பல்கள் போராட்டத்தை சீர்குலைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றனர்.

குறிப்பாக கடந்த வாரம் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு இந்துத்வா வெறியர் ஒருவர் துப்பாக்கியுடன் சென்று போராட்டக்காரர்களை மிரட்டியுள்ளார். அப்போது உடனே அங்கிருந்த போராட்டக்காரர்கள் அவரைப் பிடித்து போலிஸில் ஒப்படைத்தனர்.

அதேபோல் நேற்றைய தினம் வழக்கம்போல போராட்டம் நடைபெறும்போது, குன்ஜா கபூரை என்ற பெண் பர்தா அணிந்து போராட்டத்தை சீர்குலைக்க முயன்றுள்ளார். அவரிடம் சந்தேகமடைந்த போராட்டக்காரர்கள் மடக்கிப் பிடித்து கிடுக்கிப்பிடி கேள்வி கேட்டுள்ளனர். அதன் பின்னர் அந்தப் பெண்ணை போராட்டக்காரர்கள் போலிஸிடம் பிடித்துக் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, “டெல்லி ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படலாம். ஷாஹீன் பாக் பகுதி ஜாலியன் வாலாபாக் பகுதியாகக் கூட மாறலாம். இது நடக்கக்கூடும்.

இன்று நடக்கும் இந்த சுப்பாக்கிச் சூடு சம்பவம் போராட்டக்காரர்களை சுடவேண்டும் என பேசிய பா.ஜ.க அமைச்சரால்தான் தீவிரமானது. இந்த விவகாரம் தீவிரமானதற்கு யார் காரணம் என அரசு பதில் அளிக்கவேண்டும்.

மேலும், 2024ம் ஆண்டு வரை என்.ஆர்.சி-யை செயல்படுத்தக்கூடாது என்று அரசு தெளிவுபடுத்தவேண்டும். என்.பி.ஆர்.க்கு ரூ.3,900 கோடி செலவிடுகிறார்கள்? வரலாற்றுத் துறையைச் சேர்ந்த மாணவர் என்பதால் இந்த விஷயத்தை உணர்கிறேன்.

ஹிட்லர் தனது ஆட்சியின் போது இரண்டு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தினார். அதன்பிறகு யூதர்களை விஷவாயு அறைக்குள் தள்ளிக் கொன்றார். நமது நாடு அந்த வழியில் செல்வதை நாங்கள் விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *