திருவனந்தபுரம் (28 மார்ச் 2020): பிரதமர் மோடியின் திடீர் ஊரடங்கு உத்தரவால் நடு இரவில் ஆள் அரவமற்ற பகுதியில் பரிதவித்த பெண்களை கேரள முதல்வர் பிணராயி விஜயன் துரிதமாக செயல்பட்டு மீட்டு அவரவர் வீட்டில் ஒப்படைத்துள்ளார்.
நாட்டில் மக்களுக்கு எதிரான எந்த பிரச்சனையானாலும் தன் மாநில மக்களுக்காக துணிந்து நின்று தனி மனிதனாக போராடுபவர் பிணராயி விஜயன். குடியுரிமை சட்ட விவகாரத்திலும் அச்சட்டத்தை எதிர்த்து துணிந்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமாய் திகழ்ந்தார்.
அந்த வகையில் கொரோனா வைரஸ் உலகையே புரட்டிப் போட்டுள்ள நிலையில் , பிரதமர் மோடி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென 21 நாட்கள் தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவை அறிவித்தார்.
இதனால் பிற ஊர்களில், மாநிலங்களில் பணிபுரிவோர், அவரவர் ஊர்களுக்கு செல்வதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அதேபோலத்தான் ஹைதராபாத்தில் வேலை பார்த்து வந்த 14 கேரள இளம் பெண்கள், ஊரடங்கு உத்தரவு அறிவிக்கும் முன்பு ஒரு டெம்போ ட்ரைவர் உதவியை நாடி கோழிக்கோட்டில் இறக்கி விடுமாறு கேட்டுக் கொண்டிருந்தனர். அவரும் சரி என்று கூறியிருந்தார். ஹைதாராபாத்தில் இருந்து டெம்போவில் கர்நாடகா கேரள எல்லை வரை பயணித்துள்ளனர். ஆனால் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட செய்தி அறிந்த டிரைவர் இதற்கு மேல் வண்டியை ஓட்டிச் செல்வது ஆபத்தானது என்று அறிந்து அந்த 14 பெண்களையும், நள்ளிரவில் கேரள – கர்நாடக எல்லையில் இறக்கிவிட்டுவிட்டு கிளம்பிவிட்டார்.
ஊருக்கு எப்படி செல்வது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்த அந்த பெண்களில் ஒருவரான ஆதிரா என்பவர் , கேரள முதல்வர் பினராயி விஜயன் வீட்டுக்கே போன் செய்துள்ளார். அதிகாலை 1:30 மணிக்கும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த பினராயி விஜயன் அவர்களின் அழைப்பை எடுத்து பேசியுள்ளார். ஆதிராவின் பரபரப்பான பேச்சை அறிந்த பிணராயி விஜயன், “ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம். அதிகாரிகள் உங்களுக்கு உதவுவார்கள்” எனக் கூறி, அதிகாரிகளின் போன் எண்ணையும் கொடுத்து அவரும் அப்பகுதி ஆட்சியர் மற்றும் எஸ்.பி. ஆகியோரிடம் தொடர்பு கொண்டு நடந்த விபரங்களை கூறி அவர்களை பத்திரமாக அழைத்துச் செல்லவும் ஏற்பாடு செய்துள்ளார்.
அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் உடனடியாக அந்த பெண்களை அழைத்து செல்ல ஏற்பாடுகள் ஆனது. பத்திரமாக வீடு சென்ற அந்த பெண்களில் ஒருவரான ஆதிரா ஷாஜி தன்னுடைய அனுபவம் குறித்தும் முதல்வரின் துரித நடவடிக்கை குறித்தும் நெகிழ்ச்சியாக அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.