புதுடெல்லி (04 பிப் 2020): டெல்லி ஷஹீன் பாக் தொடர் போராட்டத்தின் பின்னணியில் திட்டமிட்ட சதி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வரும் 8 ம்தேதி சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள டில்லியில் பிரதமர் மோடி (3 ம் தேதி) பிரசாரம் மேற்கொண்டார்.
டெல்லி கார்கர்டோமா பகுதியில் உள்ள சிபிடி மைதானத்தில் நடைபெற்ற பாஜக பேரணியில் மோடி பங்கேற்று பேசியதாவது:
குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டங்கள் கடந்த பல நாட்களாக சீலாம்பூர், ஜாமியா மற்றும் ஷாஹீன் பாக் ஆகிய இடங்களில் நடந்து வருகின்றன. இந்த ஆர்ப்பாட்டங்கள் தற்செயல் நிகழ்வுகள் அல்ல. இந்த ஆர்ப்பாட்டங்கள் இந்தியாவைப் பிளவுபடுத்தும் சதி. அதன் பின்னால் அரசியல் உள்ளது. இது இந்த நாட்டின் நல்லிணக்கத்தை அழிக்கப்போகிறது.
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சட்டப் பிரிவு 370, 70 ஆண்டுகளுக்குப் பிறகு ரத்து செய்யப்பட்டது, அயோத்தி தீர்ப்பு 70 ஆண்டுகளுக்குப் பிறகு வந்தது, பாகிஸ்தானுக்கான கர்தார்பூர் வழித்தடம் 70 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டது, இந்தியா-வங்கதேசம் எல்லைப் பிரச்சினை 70 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்க்கப்பட்டது, குடியுரிமை சட்டத் திருத்தம் 70 ஆண்டுகளுக்குப் பிறகு வந்தது, போர் நினைவுச்சின்னம் 50-60 ஆண்டுகளுக்குப் பிறகு வந்தது. இவை அனைத்தும் எங்கள் ஆட்சியில் வந்தவை.
இவ்வாறு மோடி பேசினார்.
அதேவேளை டெல்லியில் போராட்டக்காரர்கள் மீது மூன்று முறை பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து வாய்திறக்காதது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.