புதுடெல்லி (13 டிச 2021): குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிரான போராட்டத்தின் போது அமைதியான முறையில் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர்கள் மீது தண்டனைச் சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ்வாதி கட்சி எம்பி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தின் போது, பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) உறுப்பினர் டேனிஷ் அலி பேசுகையில், CAA-2019 ஐ அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என்று கோரினார்.
மேலும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 இன் கீழ் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும், அமைதியான போராட்டக்காரர்களை கைது செய்ததற்காக பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட CAA, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து டிசம்பர் 31, 2014 வரை நாட்டிற்கு வந்த இந்து, சீக்கியர், பௌத்தர், ஜெயின், பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது மத ரீதியாக பாகுபாட்டை ஏற்படுத்துவதாகவும் முஸ்லிம்களை நசுக்குவதாகவும் கூறி நாடெங்கும் போராட்டம் வெடித்தது குறிப்பிடத்தக்கது.