பெங்களூரு (06 ஏப் 2022): கர்நாடகாவில் விதிமுறைகளை மீறி ஒலிபெருக்கியை பயன்படுத்தும் வழிபாட்டுத்தலங்களில் காவல்துறையினர் ஒலிவாங்கிகளை பறிமுதல் செய்யத் தொடங்கியுள்ளனர்.
பல இந்துத்வா அமைப்புகள் மசூதிகளில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ள நிலையில், ஒலி மாசுபாடு குறித்த நீதிமன்ற உத்தரவுகளை மீறியதாகக் கூறப்படும் வழிபாட்டுத் தலங்களில் இருந்து ஒலிபெருக்கிகளை பெங்களூரு நகர காவல்துறையினர் கைப்பற்றத் தொடங்கியுள்ளனர்.
செவ்வாயன்று, நகர போலீஸ் கமிஷனர் கமல் பந்த் கூறுகையில், நீதிமன்ற உத்தரவுகளை மீறிய வழிபாட்டுத்தலங்களில் இருந்து பல ஒலிவாங்கிகள் கைப்பற்றப்பட்டதாகவும், மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் கூறினார்.
மேலும் கார்டன் சிட்டியில் உள்ள கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் உட்பட 301 மத வழிபாட்டுத் தலங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது, கர்நாடக மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (கேஎஸ்பிசிபி) படி சத்தம் குறித்த விதிகளை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் பந்த் கூறினார்.
முன்னதாக ஸ்ரீராம சேனை தலைவர் பிரமோத் முத்தாலிக், அனைத்து மசூதிகளிலும் ஒலிவாங்கிகளை அகற்ற அரசாங்கம் தவறினால், கோவில்களில் ஒலிபெருக்கியில் பஜனைப் பாடி அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் என்று எச்சரித்திருந்தார். இந்நிலையில் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.