புதுடெல்லி (09 மே 2020): ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிடம் ரூ 400 கோடி கடனாக பெற்று தற்போது வெளிநாடு தப்பியோடிய தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியை மையமாக வைத்து செயல்பட்டு வந்த பாஸ்மதி அரிசி ஏற்றுமதியாளர் ராம் தேவ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் பணமோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு, சுமார் 400 கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் இருந்த நிலையில், தற்போதுதான் அது குறித்து சிபிஐயிடம் புகார் அளித்துள்ளது எஸ்பிஐ வங்கி.
2016 ஆம் ஆண்டு அந்நிறுவனத்தை ‘நான் பெர்ஃபார்மிங் அசட்’ என்னும் வரையறுக்குள் கொண்டுவந்தது எஸ்பிஐ. கடந்த பிப்ரவரி மாதம்தான் எஸ்பிஐ வங்கி, சிபிஐயிடம் ராம் தேவ் இன்டர்நேஷனல் லிமிடெட் குறித்துப் புகார் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி, அந்நிறுவனத்துக்கு எதிராக அதிகாரப்பூர்வமாக வழக்குத் தொடர்ந்துள்ளது சிபிஐ.
ராம் தேவ் இன்டர்நேஷனல் லிமிடெட், எஸ்பிஐ வங்கியிடம் 173.11 கோடி ரூபாய் கடனும், கனரா வங்கியிடம் 76.09 கோடி ரூபாயும், யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியிடம், 64.31 கோடி ரூபாயும், சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியிடம் 51.31 கோடி ரூபாயும், கார்ப்பரேஷன் வங்கியிடம் 36.91 கோடி ரூபாயும், ஐடிபிஐ வங்கியிடம் 12.27 கோடி ரூபாயும் கடன் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. மொத்தமாக ராம் தேவ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம், 414 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது.
எஸ்பிஐ அளித்தப் புகாரைத் தொடர்ந்து, சிபிஐ, ராம் தேவ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்களான நரேஷ் குமார், சுரேஷ் குமார், சங்கீதா மற்றும் பெயர் குறிப்பிடப்படாத பொது சேவை ஊழியர்களின் மேல் வழக்குத் தொடர்ந்துள்ளது. பணமோசடி, ஏமாற்றுதல், ஊழல் செய்தல் உள்ளிட்டப் பல பிரிவுகளுக்குக் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் ராம் தேவ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் மீது பணம் தராமல் ஏமாற்றியதாக பல்வேறு தரப்பினரும் புகார் அளித்துள்ளனர்.