ஒடிசா (30 மார்ச் 2021): ஒடிசாவில் கர்ப்பிணிப் பெண்ணை மூன்று கிலோமீட்டர் தூரம் நடக்க வைத்து சித்ரவதை செய்த சப்-இன்ஸ்பெக்டரை, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இடைநீக்கம் செய்துள்ளார்.
ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் குருபாரி என்ற கர்ப்பிணிப் பெண்ணும் அவரது கணவர் விக்ரம் பிருலி-யும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சாலையோரத்தில் போலீஸ் ஹெல்மெட் பரிசோதனை நடத்தி வந்தனர். பரிசோதனையின்போது வாகனம் ஓட்டிவந்த விக்ரம் ஹெல்மெட் அணிந்திருந்தார். ஆனால் அவர் மனைவி குருபாரி உடல்நலக் காரணங்களால் ஹெல்மெட் அணியவில்லை. எனினும் காரணம் கூறப்பட்டாலும், போக்குவரத்து விதிகளை மீறியதற்காக குருபாரிக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதத்தை உடனடியாகக் கட்டியே ஆகவேண்டும் என்று கூறி, காவல் நிலையத்திற்கு பைக்கிலும் செல்ல அனுமதிக்காமல் கர்ப்பிணிப் பெண் என்றும் பார்க்காமல் 3 கி.மீ போலீசார் நடக்க வைத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, குருபரி வெயிலில் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டார்.