புதுடெல்லி (14 ஜூலை 2020): இந்திய ஊடகங்கள் பாசிசவாதிகளின் பிடியில் சிக்கியுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி அவரது தொடர் ட்விட்டர் பதிவுகள் மூலம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசையும், இந்திய ஊடகங்களையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
“இந்திய ஊடகங்கள் பாசிசவாதிகளின் கையில் சிக்கி பொய்யான தகவல்களை பரப்புவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக வெறுப்பு பிரச்சாரங்களே அதில் முக்கிய இடம் பெற்றுள்ளன. தொலைக்காட்சிகள், வாட்ஸ் அப்கள் என அனைத்திலும் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும், “ஊடகங்கள் பொய்யான கதைகளை கட்டவிழ்த்து விடுவதால் நாடு துண்டாடப்படும் நிலை உறுவாகியுள்ளது” என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
“சமூக ஊடகங்கள் மூலம் காணொளியாக மக்களிடம் என் எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறேன்” என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
கடந்த ஆறு ஆண்டுகளில், பல சந்தர்ப்பங்களில் ஊடகங்களின் தகிடுதத்தங்களை ராகுல் காந்தி சுட்டிக் காட்டியுள்ளார்.
லடாக்கில் சீன “ஊடுருவல்” குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “சீன ஊடுருவல் விவகாரத்தில் ஊடகங்கள் குழப்பமடைந்து, பயந்து போகின்றன. லடாக்கில் என்ன நடக்கிறது? என்று அவர்களுக்கு தெரியும். எனினும் அவர்கள் மெளனமாக உள்ளனர்” என்று ராகுல் காந்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது..