ஊரடங்கால் ஒரு பலனும் இல்லை – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Share this News:

புதுடெல்லி (26 மே 2020): கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் 4 கட்டங்களும் தோல்வியில் முடிந்திருப்பதாக மத்திய அரசை சாடியுள்ள ராகுல் காந்தி, ஊரடங்கால் எந்த பலனும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் மூலமாக செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியதாவது:- “பிரதமர் மோடியும், அவரின் ஆலோசனை அதிகாரிகளும் ஊரடங்கால் கொரோனா பாதிப்பு குறைந்துவிடும், நோயாளிகள் குறைந்துவிடுவார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் அவ்வாறு கொரோனா பாதிப்பு நாட்டில் குறையவில்லை.

கொரோனா பாதிப்பை சமாளிக்க, எதிர்கொள்ள மத்திய அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது என்று நான் பிரதமர் மோடியிடம் கேட்கிறேன். கொரோனா நோயைக் கட்டுப்படுத்திவிட்டோம் என மத்திய அரசு நினைத்து வருகிறது.

ஆனால் உண்மையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கொண்டு வந்த ஊரடங்கு திட்டம் தோல்வி அடைந்துவிட்டது. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன, மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். அடுத்த மாற்றுத்திட்டம் என்ன என்பது குறித்து மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

கொரோனாவை கட்டுப்படுத்த என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கப்போகிறது. தற்போது இந்தியா எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் ஊரடங்கின் தோல்வியே ஆகும். பிரதமர் எதிர்பார்த்த முடிவுகளை ஊரடங்கு தரவில்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது” இவ்வாறு அவர் கூறினார்.


Share this News: