ஹிஜாப் தடை விவகாரம் – உடனடி விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு!

Share this News:

புதுடெல்லி (24 மார்ச் 2022): தேர்வு நெருங்கி வருவதால் ஹிஜாப் தடை விவகாரத்தை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கர்நாடக மாநிலத்தில் பள்ளி கல்லுரிகளில் ஹிஜாப் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து இஸ்லாமிய முஸ்லீம் மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கடந்த மாதம் 15-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

அதில் பள்ளி, கல்லூரி உள்பட கல்வி நிலையங்களில் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகள் அணிய தடை விதித்த மாநில அரசின் உத்தரவு செல்லும். மேலும், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த தீர்ப்புக்கு பின் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் வழக்கமான வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆனால்,ஹிஜாப் தடை காரணமாக முஸ்லீம் மாணவிகள் பள்ளி கல்லுரிகளுக்கு வர முடியவில்லை.

மேலும், நீதிமன்ற தீர்ப்புக்கு பின் பள்ளிகளில் நடைபெற்ற இறுதி செய்முறை பயிற்சி தேர்வுகளையும் சில முஸ்லீம் மாணவிகள் எழுதவில்லை. இதனால், தேர்வில் பங்கேற்காத மாணவிகளுக்கு ‘ஆப்சென்ட்’ போடப்பட்டுள்ளது.

மேலும், இறுதி செய்முறை பயிற்சி தேர்வு எழுதாத மாணவ-மாணைவிகளுக்கு மறுதேர்வு எதுவும் நடத்தப்படாது என கர்நாடக பள்ளிகல்வித்துறை அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அதேவேளை வரும் 28-ம் தேதி முதல் பள்ளிகளில் இறுதித்தேர்வுகளும் தொடங்க உள்ளன. இந்த இறுதி தேர்வுகளையும் எழுதவில்லை என்றால் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று அடுத்த வகுப்புக்கு செல்வதில் பெரும் சிக்கல் ஏற்படலாம்.

இந்நிலையில், மாணவ-மாணவிகளுக்கு வரும் 28-ம் தேதி தேர்வு தொடங்க உள்ளதால் ஹிஜாப் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மேல்முறையீடு செய்துள்ள மாணவிகளின் வழக்கறிஞர்களில் ஒருவரான கமத் உச்ச நீதிமன்றத்தில் இன்று முறையிட்டார்.

ஆனால், ஹிஜாப் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. இதனால், ஹிஜாப் வழக்கை எப்போதில் இருந்து விசாரிப்பது என்பதை உச்ச நீதிமன்றம் அடுத்த வாரம் முடிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *