புதுடெல்லி (18 ஜுன் 2021): சிஏஏ போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நட்டாஷா நிர்வால், தேவங்கனா கலிட்டா, ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர் ஆஷிப் இக்பால் ஆகியோரது ஜாமீனை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சிஏஏ போராட்டத்தில் ஈடுபட்ட மூவரையும் உபா சட்டத்தில் கைது செய்த டெல்லி போலீஸ் அவர்களை சிறையில் அடைத்தது. இவர்கள் ஜாமீன் மீதான விசாரணையின்போது டெல்லி உயர் நீதிமன்றம் போராட்டத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் இடையே வேறுபாடு உள்ளது, ஐபிசியின் கீழ் வரும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சர்வ சாதாரணமாகப் பயங்கரவாதச் சட்டம் பயன்படுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது. போலீசாரின் பதிவு செய்துள்ள வழக்குகள் தெளிவானதாக இல்லை. பயங்கரவாத தடுப்பு சட்டங்களை நியாயமான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும். அது போராட்டம் நடத்துபவர்களை அநியாயமாகத் தண்டிக்கப் பயன்படுத்தக் கூடாது என்று கூறி ஜாமீன் வழங்கியது.
இந்த ஜாமீனை எதிர்த்து டெல்லி போலீஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் வி ராமசுப்பிரமணியன் ஆகிய இரு பேர் கொண்ட பெஞ்ச் உயர் நீதிமன்ற ஜாமீன் மீதான மனுவை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்டது. எனினும் உயர் நீதிமன்ற உத்தரவை ஆய்வு செய்யும் என்றும் கூறி இந்த விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.