புதுடெல்லி (26 பிப் 2020): டெல்லி வன்முறைக்கு காவல்துறையின் மெத்தனப்போக்கே காரணம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லி கலவரம் தொடர்பான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி கே.எம்.ஜோசப் முன்பு நடந்த இந்த விசாரணையில், காவல்துறையை நீதிபதி கடுமையாக சாடினார்.
வன்முறையின் போது உடனடி நடவடிக்கை எடுக்காமல், எதற்காக காத்திருக்க வேண்டும். ஏன் இந்த அளவிற்கு நிலைமையை கைமீறி போக விட்டீர்கள்.
காவல் துறையின் மெத்தனப் போக்கால் தான் பிரச்சினை பெரிதானது. டெல்லி கலவரம் துரதிருஷ்டவசமானது, வேதனை அளிக்கிறது என நீதிபதி கே.எம்.ஜோசப் காவல்துறை மீது அதிருப்தி வெளியிட்டார்.
மேலும் வன்முறை சம்பவத்திற்கும், ஷஹீன் பாக் போராட்டத்திற்கும் தொடர்பில்லை என்றும், ஷஹீன் பாக் வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது எனவும் அரசு தரப்பு விளக்கம் அளித்தது.