புதுடெல்லி (05 ஜன 2023): : உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானில் உள்ள ரயில்வே நிலத்தில் இருந்து 4365 குடும்பங்களை வெளியேற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஹல்த்வானில் மூன்று அரசுப் பள்ளிகள், 11 தனியார் பள்ளிகள், 10 மசூதிகள், 12 மதரஸாக்கள், கோவில்கள் மற்றும் மருத்துவமனை. சுமார் அரை லட்சம் மக்களால் ஏழு தசாப்தங்களாக கட்டப்பட்ட குடியேற்றத்தை விட்டு போக வேண்டும் என்று உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
நோட்டீஸ் கிடைத்த ஒரு வாரத்திற்குள் காலி செய்ய உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிசம்பர் 20 அன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து மறுநாளே பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். எனினும் அரசு கருணை காட்டவில்லை. ஞாயிற்றுக்கிழமை மக்களை வெளியேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கான புல்டோசர் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் அங்கு வசித்துவரும் குடியிருப்பாளர்கள், 70 வருடங்களாக தாங்கள் வாழ்ந்து வரும் காணிகளிலிருந்து தம்மை வெளியேற்றக் கூடாது என அங்கு வசிக்கும் மக்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவில் தெரிவித்திருந்தனர்.
இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது திடீரென ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்ற முடியாது. பல ஆண்டுகளாக அங்கு வசிக்கும் மக்களை அப்புறப்படுத்த துணை ராணுவப்படைகளை அனுப்புவது சரியல்ல. என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இதற்கு நடைமுறை தீர்வு காண வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கு பிப்ரவரி 7ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.