பெங்களூரு (01 பிப் 2020): குடியுரிமை சட்டத்தை விமர்சித்து பள்ளி விழாவில் நிகழ்த்தப்பட்ட நாடகம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகாவில், பிடார் மாவட்டத்தில் உள்ள, ஷாஹீன் பள்ளியில், நடந்த விழாவில் கடந்த மாதம், 21 ல் மாணவர்களின் நாடகம் நடைபெற்றது. அதில், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக விமர்சிக்கப் பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து, நீலேஷ் ரக் ஷயால் என்பவர், போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, சில தினங்களுக்கு முன், ஷாஹீன் பள்ளி மீது தேச துரோக வழக்கு தொடரப்பட்டது. மேலும் நான்காம் வகுப்பு மாணவர்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்திய படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்று, அப்பள்ளியின் தலைமை ஆசிரியை, நாடகத்தில் நடித்த மாணவரின் தாய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் ஜனநாயக நாட்டில் ஒட்டும் ஒத்தமாக கருத்துச் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதாகவும், எந்த ஒரு கருத்தையும் ஏற்றுக் கொள்ளாத அரசாக ஆளும் பாஜக அரசு இருப்பதாக பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.