புதுடெல்லி (20 மே 2020): வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினரின் கைது நடவடிக்கை உலகளவில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசியத் துணைத்தலைவர் வழக்கறிஞர் ஷர்புத்தீன் அஹ்மத் கூறியுள்ளதாவது:
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திடீரென்று அறிவிக்கப்பட்ட தேசம் தழுவிய ஊரடங்கால், அயல்நாட்டு தப்லீக் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தம் தாய்நாட்டிற்கு திரும்பச் செல்லமுடியாமல் ஆங்காங்கே சிக்கித் தவிக்கிறார்கள் என்பது அறிந்ததே.
மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் சுரேஷ் சர்மா தலைமையிலான அமர்வு கடந்த வெள்ளியன்று 51 தப்லீக் உறுப்பினர்களை 14 நாள் நீதித்துறை காவலில் அடைக்க உத்தரவிட்டதோடு, அதற்கு முந்தைய நாள் 18 தப்லீக் உறுப்பினர்களை மே 14 முதல் மே 27 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. அவர்களின் ஜாமீன் மனுக்களையும் ரத்து செய்தது. இவ்வாறு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்ட அயல்நாட்டினர் கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தோனேசியா, மியான்மர், தென் ஆப்ரிக்கா, தான்சானியா, கனடா, பிரிட்டன் மற்றும் பென்சில்வேனியா ஆகிய நாடுகளைச் சார்ந்தவர்கள் ஆவர்.
இதுதொடர்பாக வழக்கறிஞர் ஷர்புத்தீன் அஹ்மத் வெளியிட்டுள்ள அறிக்கையில், அயல்நாட்டு விருந்தினர் மீது சுமத்தப்பட்ட குற்றவழக்குகளை திரும்பப் பெறுவதுடன், அவர்களை கண்ணியத்தோடு அவரவர் தாய் நாடுகளுக்கு வழியனுப்பி, மேலும் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதைத் தடுத்திடவேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகளை அவர் வலியுறுத்தினார்.
அயல் நாடுகளைச் சார்ந்த பல்வேறு மதநம்பிக்கைகளைக் கொண்டோர் சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு வருவதும், அவர்கள் நம்பிக்கைச் சார்ந்த மதநிகழ்வுகளில் பங்கேற்பதும் நீண்டகாலமாக உள்ள நடைமுறையே என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
இதுவொன்றும் ரகசியமான செயல் இல்லாததோடு, மத்திய அரசின் அயலகத்துறை மற்றும் பிற துறைகள் அறிந்தே நடைபெற்றுவருவதாகும். அயல்நாடுகளைச் சார்ந்த தப்லீக் இயகத்தினர் சட்டபூர்வமாக இந்தியாவிற்கு வருகைதந்து மதசம்மந்தமான நிகழ்வுகளில் பங்கேற்பது என்பது புதிதான ஒன்றல்ல என்பதையும் அவர் நினைவூட்டினார்.
எனவே, நம் நாட்டிற்கு விருந்தினராக வருகைதந்த அயல்நாடுகளைச் சார்ந்த தப்லீக் உறுப்பினர்களை இந்திய அயல்நாட்டினர் சட்டம் 13, 14 / 1946 பிரிவுகளை மீறியதாக துன்புறுத்துவது முற்றிலும் ஏற்புடையதல்ல என்றார் அவர்.
மேற்கண்ட சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவரையும் தாமதிக்காமல் விடுவிப்பதுடன், பறிமுதல் செய்யப்பட்ட அவர்களின் கடவுச்சீட்டுகளை அவர்களுக்கு சேர்ப்பித்து அவர்களுக்குரிய கண்ணியத்துடன் அவரவர் தாய்நாடுகளுக்கு திரும்பச் செல்வதற்கான ஏற்பாடுகளை அரசு செய்யவேண்டும் என்ற கோரிக்கையையும் வழக்கறிஞர் ஷர்புத்தீன் அஹ்மத் முன்வைத்தார்.